பெர்டா திறந்த குத்தகை முறையை அமல்படுத்தியதா? முதல்வர்

முதல்வர் பெர்டா நில விவகாரம் குறித்த வரைப்படத்தைக் காண்பிக்கிறார். (உடன் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள்)
முதல்வர் பெர்டா நில விவகாரம் குறித்த வரைப்படத்தைக் காண்பிக்கிறார். (உடன் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள்)

தெற்கு செபராங் பிறை, தொக் கெராமாட் பகுதியில் அமைந்துள்ள நிலத்தை பினாங்கு கூட்டரசு முன்னேற்ற வாரியம் (பெர்டா) சந்தை கொள்முதல் விலையைக் காட்டிலும் மிகக் குறைவாக விற்றதன் காரணத்தை வினவினார் மாநில முதல்வர் லிம் குவான் எங்.
3.461 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இப்பகுதியை வீடமைப்புத் திட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு கடந்த 28/7/2015-ஆம் நாள் SYT Prestige Sdn. Bhd எனும் நிறுவனத்திடம் விற்கப்பட்டது. இந்நிலத்தை 256 லோட்டாகப் பிரிக்கப்பட்டு ரிம1.427 மில்லியனுக்கு விற்கப்பட்டது . ஆனால் அந்நிலத்தின் மதிப்பீடு ரிம16.636மில்லியன் என மாநில உள்நாட்டு வரி வாரியம் நிர்ணயித்துள்ளது..
எனவே, பெர்டா நிலத்தை ரிம1.427 மில்லியனுக்கு விற்பனைச் செய்ததன் மூலம் ரிம15.209 மில்லியன் இழப்பீடு பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர். நில விவகாரம் மற்றும் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினரான குவான் எங் இந்நில கொள்முதல் திறந்த குத்தகை முறையில் இடம்பெற்றதா என பெர்டா தலைவரும் தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ சாபுடினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்பகுதி நிலம் புதைகுழுகளாக இருப்பதால் கூடுதல் நில சிகிச்சை செய்வதற்குக் கூடுதல் பணம் தேவைப்படுவதால் குறைந்த விலைக்கு விற்றதாக டத்தோ சாபுடின் பதிலளித்துள்ளார். இன்று 4/4/2016-ஆம் நாள் மாநில முதல்வர் நேரடியாக சம்பந்தபட்ட நிலப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். அந்நிலத்தை சிகிச்சை அளிப்பதற்கு ஏறக்குறைய ரிம5 லட்சம் செலவிடப்படும் என நில பொறியியலாளர் நிபுணர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்நிலம் வீடமைப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் குறுகிய காலக்கட்டத்தில் கடைவீடுகள் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. மக்களின் பொதுச் சொத்துகள் காக்கப்பட வேண்டும் என்றார்.
“மக்கள் நலன் மற்றும் பணம் சார்ந்துள்ள இந்நிலத்தை ஏன் பெர்டா மிகக் குறைவான விலையில் விற்க வேண்டும்” என்றார் முதல்வர்.
மேலும் , வீடமைப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இந்நிலத்தில் 27 யூனிட் கடை வீடுகள் கட்டுவதற்குத் “திட்டமிடல் அனுமதி” கோரி செபராங் பிறை நகராண்மைக் கழகத்திடம் கடந்த 28/3/2016-ஆம் நாள் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வீடமைப்புத் திட்டம் , இப்பொழுது கடை வீடுகள் என மேம்பாட்டுத் திட்டம் மாறுபடுவதற்குக் காரணம் கேட்ட முதல்வருடனான சந்திப்புக் கூட்டத்திற்கு டத்தோ சாபுடின் வருகை புரியவில்லை. எனவே, டத்தோ சாபுடின் பதிலளிக்காத நிலையில் கூட்டரசு அரசாங்க மேம்பாட்டுச் செயற்குழுத் தலைவர் டத்தோ சாய்னால் அபிடின் ஒஸ்மான் முன் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்றார் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதல்வர் .