பொது சந்தைகளில் டிசம்பர் மாதத்திற்குள் 20,000 பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு இலக்கு – முதல்வர்

Admin

பந்தாய் ஜெரெஜா – இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குள் மின் கட்டண முறையைப் பயன்படுத்தி பொதுச் சந்தையில் குறைந்தது 20,000 பணமில்லா பரிவர்த்தனைகளை அமல்படுத்த மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது.

தாமான் துன் சர்டுன் பொதுச் சந்தையில் இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பினாங்கு முழுவதும் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளிலும் மின்- பரிவர்த்தனை அமல்படுத்த மாநில அரசு 17 வங்கி நிறுவனங்களையும், வங்கி சாராத மின்னணு பணம் வழங்குநர்களையும் இணைத்துள்ளன.
அவை ‘Maybank, CIMB Bank, Public Bank, Hong Leong Bank, Ambank, Touch n Go Digital, Grab, Boost, Shopee, Razer, WavPay, MCash, KiplePay, GoBiz, iPay88, GHL, Fave மற்றும் Paynet’ ஆகும்.

“56 பொதுச் சந்தைகளிலும் 90 விழுக்காடு பணமில்லா பரிவர்த்தனையை பயன்பாட்டில் செயல்படுத்த மாநில அரசு இலக்காகக் கொண்டுள்ளது; இதில் மொத்தம் 5,000 வர்த்தகர்களில் 70 விழுக்காட்டினர் பேர் இந்த மின்-கட்டண முறையைப் பயன்படுத்துவர்.

“பினாங்கு மக்களிடையே குறிப்பாக வியாபாரிகள் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் பணமில்லா பரிவர்த்தனை மூலம் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் மூலம்
டிஜிட்டல் பிளவுகளை குறைக்க
இத்திட்டம் உதவுகிறது.

“இதனிடையே, பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக, வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா மின்னணு பணம் வழங்குநர்கள் வணிக நிறுவனங்களுக்கு தள்ளுபடி விகிதம் (எம்.டி.ஆர்) கட்டணங்களை குறைத்தல், மின் கட்டண வர்த்தகர்களுக்கு வெகுமதி, பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு, வருடாந்திர வாடகை, பராமரிப்பு கட்டணம் மற்றும் பல சலுகைகளை வணிகர்களுக்கு வழங்க முன்வந்துள்ளனர்.

” மலேசிய தேசிய வங்கி (பி.என்.எம்), டபிள்யூ.சி.ஐ.டி 2020 தனியார் நிறுவனம் மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் ஆணையம் (எம்.சி.எம்.சி) ஆகிய நிறுவனங்கள் பினாங்கு முழுவதும் உள்ள பொதுச் சந்தையில் பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை வெற்றிகரமாக மாற்றுவதில் அனைவரின் ஒத்துழைப்பை பாராட்டுகிறேன், “என்று பாயான் பாரு பொதுச் சந்தையில் பணமில்லா பரிவர்த்தனை திட்ட துவக்க விழாவில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் இவ்வாறு கூறினார்.

அதே வேளையில், 17 தொடர்புடைய நிதிச் சேவை முகவர் நிலையங்கள் மற்றும் 14 பொதுச் சந்தை வணிகர் சங்கங்களும் அங்கீகார சான்றிதழ்களைப் பெற்றன.

பொது சந்தையில் பணமில்லா பரிவர்த்தனை முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதிச் செய்வதில், 250 ஊக்குவிப்பாளர்களையும் 32 டிஜிட்டல் பயிற்சியாளர்களையும் நியமிக்க மாநில அரசு கிட்டத்தட்ட ரிம1 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக சாவ் கொன் யாவ் தெரிவித்தார். நியமிக்கப்பட்ட விளம்பரதாரர் மற்றும் டிஜிட்டல் பயிற்சியாளர் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மின்-கட்டண பயன்பாட்டு நடைமுறையை நன்கு புரிந்துகொள்ளவும் அவற்றை டிஜிட்டல் உலகிற்கு வெளிப்படுத்தவும் உதவுவர் என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த விளம்பரதாரர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு ஒரு மாதத்திற்கு ரிம500 ஊக்கத்தொகை வழங்கப்படும். அதே நேரத்தில், கோவிட்-19 தாக்கத்திலிருந்து வேலை இழந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வேலையாக இது அமையும்.

இதற்கிடையில், நியமிக்கப்படும் 32 டிஜிட்டல் பயிற்சியாளர்கள் மாதாந்திர வருமானமாக ரிம1,000 (ஒரு வருட காலம்) பெறுவர், மேலும் பணமில்லா பரிவர்த்தனையை ட பொதுமக்களுக்கு புரிய வைக்கவும் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் அவர்கள் செயல்படுவர்.

இதனிடையே, ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தனது உரையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் பணமில்லா பரிவர்த்தனை திட்டம் தொடங்கியதிலிருந்து, பொதுச் சந்தையில் மின்-பரிவர்த்தனை பயன்பாடு மிகவும் ஊக்கமளிப்பதாக தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் முதல் 13 பொதுச் சந்தைகளில் மொத்தம் 2,341 வர்த்தகர்களில் (42%) மின் பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். இதில் மூன்று பொதுச் சந்தைகள் ஆயிர் ஈத்தாம் பொதுச் சந்தை ( 68.1%), பண்டார் தாசெக் முத்தியாரா பொதுச் சந்தை (64.9%) மற்றும் பாயான் பாரு பொதுச் சந்தை (63.2%) பணமில்லா பரிவர்த்தனையை அமல்படுத்துகின்றனர் என ஜெக்டிப் விவரித்தார்.