மக்களின் நலன் கருதி நியாயமான கட்டணத் தள்ளுபடியுடன் நில குத்தகை நீட்டிக்கப்படும் – முதலமைச்சர்

Admin

 

ஸ்ரீ டெலிமா – பினாங்கு ஒற்றுமை மாநில அரசு, பொது மக்கள் நில உரிமை குறித்து
விண்ணப்பம் செய்தால், நியாயமான கட்டணம் விகிதத்துடன் நில உரிமையை 99 ஆண்டுகள் வரை நீட்டிக்கத் தயாராக உள்ளது.

எனவே, முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், குத்தகை காலாவதியாகும் முன் நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அதன் குத்தகையை நீட்டிக்க சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், என்று கூறினார்.

“இந்த ஆண்டு (2023), மாநில அரசு குடியிருப்பு, வணிகம், விவசாயம், தொழில், நிறுவனங்கள் மற்றும் பல வகையான நில பயன்பாட்டுக்கான குத்தகைக் காலத்தை நீட்டிக்கும் அனுமதியை வழங்க முடிவு செய்துள்ளோம்.

“விண்ணப்பதாரர்கள் 60 ஆண்டுகள் அல்லது 99 ஆண்டுகள் முடியும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை; இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் வைத்திருக்கும் போது கூட, குத்தகை காலத்தை நீட்டிக்க விண்ணப்பிக்கலாம்,” என்று ஜாலான் பூங்கா ராயாவில் உள்ள தாமான் கெஜிரானில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு பேசும்போது அவர் விளக்கமளித்தார்.

குடியிருப்பு வகை நில உரிமை வைத்திருப்பவர்களுக்கு, நிலத்தின் தற்போதைய மதிப்பில் இருந்து 90 சதவிகிதம் தள்ளுபடி வழங்க அவரது நிர்வாகம் முடிவு செய்ததாக நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல்தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கூறினார்.

“இங்குள்ள சொத்துக்களுக்கு (குடியிருப்பு வகை) ரிம300,000 மதிப்புடையது என்றால், 99 வருட குத்தகைக்காலத்தில் 20 ஆண்டுகள் மீதமுள்ளது; இதன் மதிப்பு ரிம60,000 என்றால், ரிம300,000-இல் ரிம60,000 கழித்து ரிம240,000 என கணக்கிடப்படும்.

“எனவே 90% தள்ளுபடி ரிம240,000 என கணக்கிடப்பட்டால், அதாவது நீங்கள் 10 சதவிகிதம் (நில கட்டண மதிப்பில்) அல்லது ரிம24,000 மூன்று ஆண்டுகள் வரை தவணை முறையில்
செலுத்த வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.

விரிவாக்கப்பட்ட விவசாயப் பிரிவினருக்கு நிலம் வைத்திருக்கும் மதிப்பில் 90 சதவீத தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இதனுடன்
வணிக வகைக்கும் (80 சதவீதம் தள்ளுபடி) வழங்கப்படும்.

“பினாங்கு வளர்ச்சியில் பங்காற்றிய தொழில்துறை வகை நில உடமைகளுக்கு, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 50 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை தள்ளுபடியுடன் நீட்டிக்கப்பட வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.

மேலும் பேசிய சாவ் கொன் இயோவ், தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை இங்கு வெற்றிகரமாக நடத்துவதற்கு உள்ளூர் மக்கள் காட்டிய நல்லெண்ண மனப்பான்மைக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், புக்கிட் குளுகோரின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதமர் துறையின் துணை அமைச்சரும் (சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தம்) ராம்கர்பால் சிங், கொன் இயோவ் நிர்வாகத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். ஏனெனில் கடந்த ஆண்டு இத்தொகுதியில் பல வகை ரியல் எஸ்டேட் நிலம் வைத்திருக்கும் குத்தகை காலம் 60 ஆண்டுகளில் இருந்து 99 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில், ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர், கோனி டான் ஹூய் பிங், கொன் இயோவ் அவர்களால் தொடங்கப்பட்ட பினாங்கு2030 இலக்கின் அடிப்படையில் உள்ளூர்வாசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றுவேன், என்றார்.

 

மேலும், லெங்கோக் பாவா கிராம சமூக மேலாண்மை கழகம் (MPKK), ஸ்ரீ டெலிமா மாநில சட்டமன்ற சேவை மையம் மற்றும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற சேவை மையம் ஆகியவற்றில் கடுமையாக உழைத்த அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.