மலேசிய இந்தியர் வர்த்தகத் தொழிலியல் சங்கத்தின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – மலேசிய இந்தியர் வர்த்தகத் தொழிலியல் சங்கம் பினாங்கு இந்திய சமூகத்தின் நலனுக்காகக் கொண்டு வரும் பரிந்துரைகள் மாநில அரசாங்கத்தால் உரிய பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று முதல்வர் சாவ் கொன் இயோவ் கூறினார்.

சமூகத்தின் நலனுக்காகப் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளைப் பரிசீலிக்க மாநில அரசு தயார் நிலையில் இருப்பதாகக் கூறினார்.

உதாரணமாக, பீச் ஸ்ட்ரீட் மற்றும் மார்க்கெட் ஸ்ட்ரீட் பதைக்கு இடையில் பிரமாண்டமான நுழைவாயில் நிர்மாணிக்கும் திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.

இதற்கிடையில், பொறியியலாளர் நுழைவாயில் நிர்மாணிப்புத் திட்டத்தை உறுதிச் செய்யும் முன் இப்பகுதியில் வடிகால் மற்றும் சாலை மேம்படுத்தப்படும்.

அதுமட்டுமின்றி, உள்ளூர் அரசாங்கத்தின் பல நிபந்தனைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்,” என பினாங்கு, மலேசிய இந்தியர் வர்த்தகத் தொழிலியல் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து முதல்வர் சாவ் இவ்வாறு கூறினார்.


“கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 தொற்றுநோயால் பெரும் தாக்கத்தை எதிர்நோக்கிய வேளையில் தற்போது 2022 ஆண்டு பொருளாதார ரீதியில் மீட்சிபெற வழிவகுக்கிறது. மேலும், பினாங்கு மாநிலத்தில் உற்பத்தித் துறையில் முதலீடு அதிகரித்து வரும் வேளையில் கூடுதல் வேலை வாய்ப்புகளுக்கு வித்திடுவதோடு பொது மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும். இது மாநில பொருளாதார முன்னேற்றத்தைச் சித்தரிக்கிறது.

“எனவே, மாணவர்கள் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற துறைகள் தேர்த்தெடுப்பது அவசியம். இதன் மூலம் தொழில்துறையின் தேவையைப் பூர்த்திச் செய்ய முடியும்.

பினாங்கு, மலேசிய இந்தியர் வர்த்தகத் தொழிலியல் சங்கம் நோன்புப் பெருநாள், கிறிஸ்மஸ், தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டம் மற்றும் பரிசுக்கூடைகள் வழங்குதல் போன்ற பல சமூகநலத் திட்டங்கள் வழிநடத்துவது, பாராட்டக்குரியது.

பினாங்கு வாழ் மக்கள் மதம், இனம், மொழி என்ற பாகுபாடின்றி அவரவர் நம்பிக்கை மற்றும் கொண்டாட்டங்களுக்கு மரியாதைச் செலுத்தி நல்லிணக்கத்தைப் பேணுகின்றனர். பல்லின மக்கள் வாழும் இத்திருநாட்டில் ஒற்றுமையை வலுப்படுத்துவது அவசியம், என்றார்.

இந்நிகழ்ச்சியில் பினாங்கு, மலேசிய இந்தியர் வர்த்தகத் தொழிலியல் சங்கத் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன்; துணைத் தலைவர் டத்தோ முனியாண்டி; செயலாளர் முனுசாமி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த இரண்டு வருடங்களாக தொற்றுநோய் தாக்கத்தால் வியாபாரத்தில் பெரும் பாதிப்பை எதிர்நோக்கிய லிட்டல் இந்தியா வர்த்தகர்களுக்கு இந்த வருட பொங்கல் பண்டிகை சிறந்த தொடக்கமாகத் திகழும், என நம்பிக்கை தெரிவித்தார்.