மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை, மாநில அரசுடன் இணைந்து இந்தியச் சமூக மேம்பாட்டுக்குப் பணியாற்ற இணக்கம்

Admin

ஜார்ச்டவுன் – மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை பினாங்கு மாநில அரசாங்கத்துடன் இணைந்து இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்குச் சேவையாற்ற இணக்கம் கொள்கிறது.

மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை இந்து மத விவகாரங்கள் மட்டுமின்றி இந்தியச் சமூக முன்னேற்றத்திற்கும் பல ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் வழிநடத்தி வருவதாக அதன் தலைவர் மோகன் பாலசுந்திரம் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 44 ஆண்டுகளாக வருடாந்திர நிகழ்ச்சியாக திருமுறை ஓதும் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாநில ரீதியிலான போட்டி வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெறுகிறது.
இவ்விழாவை மாநில முதல்வர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்க வேண்டும் என மோகன் கேட்டுக் கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டு இந்தியர்களின் மேம்பாட்டுக்குத் தொடர்ந்து திட்டங்கள், பட்டறைகள் , விழாக்கள் ஏற்று நடத்துவதற்கு வருடாந்திர மானியம் வழங்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மாநில அரசு இக்கோரிக்கையைச் சீர்தூக்கிப் பார்த்து பரிசீலிக்கும் என தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவைத் துணைத் தலைவர் விவேக நாயகன் தர்மன்; செயலாளர் டாக்டர் இரா.லலிதா மற்றும் துணைச் செயலாளர் சு.சத்தியசீலன்
ஆகியோர் இன்று நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

“எங்கள் சமூகப் பணிகள் மதம், கோயில், பெண்கள், இளைஞர்கள், சமூகநலன், கல்வி மற்றும் பல முக்கிய பிரிவுகள் உள்ளடக்கியது,” என தர்மன் கூறினார்.

தற்போது மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை, பினாங்கு ஹார்மனி கார்ப்பரேஷன் (HARMONICO) இணைந்து பல மத சார்ந்த நிகழ்ச்சிகள் ஏற்று நடத்துவதாக
பௌத்தம், கிறிஸ்தவம், இந்து மதம், சீக்கியம் மற்றும் தாவோயிசம் ஆகியவற்றின் மலேசிய ஆலோசனைக் குழு பினாங்கு மாநிலத் தலைவருமான(MCCBCHST) தர்மன் கூறினார்.

மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை இம்மாநிலத்தில் கடந்த 44 ஆண்டுகளாக தனது 11 கிளைகளுடன் சிறந்த சேவையாற்றி வருகிறது. இச்சங்கத்தில் 3,000 உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர்.

மேலும், இந்து சங்கத்திற்குச் சொந்த கட்டிடம் வாங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்தனர். தற்போது, பண்டார் பிறை ஜெயாவில் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அதன் தலைமையக நிர்வாகத்தை வழிநடத்துவதாக தர்மன் தெரிவித்தார்.

மாநில முதல்வர் சாவ் கொன் இயோவ் அவர்களுக்குப் பொன்னாடைப் போற்றி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.