பாகான் – மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ரிம 5 மில்லியன் பல்நோக்கு மண்டபக் கட்டுமான பணிகள் இறுதியாக நிறைவுப்பெற்றது.
கட்டிடக் குழுத் தலைவரும் வழக்கறிஞருமான ஆர். சரவணன் கூறுகையில், பள்ளிக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். அருணாசலம் மற்றும் அவரது குழுவினரின் 12 ஆண்டுகால முயற்சியின் பலனாக இத்திட்டம் நிறைவுபெற்றது, என்றார்.
நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் என்.எஸ்.குணசேகரன் இம்மண்டபத்தில் ஆயிரம் பேர் அமரக்கூடிய வசதியும், குளிர்சாதன வசதியும் உள்ளது, என்றார்.
இந்த மண்டபத்தில் மாணவர்களுக்கான சிறப்பு நடவடிக்கைகள் குறிப்பாக புறப்பாட நடவடிக்கைகள், நிகழ்ச்சிகள் ஏற்று நடத்தப்படும். மேலும், பொதுமக்களும் திருமண வைபவங்கள், விருந்தோம்பல், பட்டறைகள் நடத்துவதற்கும் வாடகைக்கு விடப்படும், என்றார்.
குணசேகரன் மேலும் கூறுகையில் இப்பள்ளி மண்டப வளர்ச்சிக்கு நன்கொடைகள் மற்றும் உதவிகள் வழங்கிய மாநில அரசு, அரசியல் தலைவர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மலேசிய துணை கல்வியமைச்சர் லிம் உய் இங், பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், செனட்டர் லிங்கேஸ்வரன், மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மேளாலர் வாரியக் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆர் அருணாசலம், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
“வட பிரந்தியத்தில் மிக பெரிய மற்றும் பிரமாண்டமாக திகழும் இந்த பல்நோக்கு மண்டபம் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு சிறப்பு அடையாளமாகத் திகழும்,” என மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி பல்நோக்கு மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் புகழாரம் சூட்டினார்.
பினாங்கு மாநில அரசு “நாம் பினாங்கு வாழ் மக்கள்” என்ற அடையாளத்தின் அடிப்படையில் சமூக முன்னேற்றத்தை முன்னிறுத்தி ரிம6.6 கோடி மதிக்கத்தக்க 4 ஹெக்டர் நிலத்தை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் மேளாலர் வாரியக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது என லிம் உறுதிப்படுத்தினார். மேலும், இப்பள்ளியின் வளர்ச்சிக்குக் கூடுதலாக ரிம50,000 மானியத்தை குவான் எங் அறிவித்தார்.
இதனிடையே, 800 மாணவர்களுக்கும் கூடுதலாக பயிலும் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு மூன்று மாடிக் கட்டிடம் தேவைப்படுவதையும் தமதுரையில் குறிப்பிட்ட இப்பள்ளியின் தலைமையாசிரியர் குணசேகரனின் கோரிக்கைக்கு கல்வித்துறையிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்குமாறும் அவ்விண்ணப்பம் பரீசிலனை செய்யப்படும் எனவும் துணை கல்வியமைச்சர் லிம் உய் இங் தமதுரையில் குறிப்பிட்டார். மேலும், 50 ஆண்டுகள் பழமையான மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் பராமரிப்பு நிதியமாக ரிம 300,000 வழங்கப்படும் என உய் இங் அறிவிப்பு செய்தார்.
இதனிடையே, மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மேளாலர் வாரியக் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர் கழகத்துடன் இணைந்து மாக் மண்டின் பல்நோக்கு மண்டபத்தை நிறைவு செய்ததற்கு உய் இங் அனைத்து தரப்பினரையும் பாராட்டினார்.
மேலும், தமிழ்ப்பள்ளி மற்றும் சீனப்பள்ளி என பேதம் பாராமல் உதவி தேவைப்படும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் உதவிகள் நல்கப்படும் என மேலும் அவர் உறுதிப்படுத்தினார்.