மாணவர்களைக் கல்வி கேள்விகளில் ஊக்கப்படுத்த தங்க மாணவர் திட்டம்: ரிம 100 ஊக்குவிப்புத்தொகை

148800_526760237341431_514234454_n

 

 

 

 

 

 

 

 

 

 

தங்க மாணவர் திட்டத்தில் பயன்பெற்ற நம் இந்திய மாணவர்களும் பெற்றோர்களும்

 

பொது மக்களின் நலன் கருதிப் பல அரிய திட்டங்களைத் தீட்டிவரும் மக்கள் கூட்டணி அரசு தங்க மாணவர் திட்டம் என்ற மற்றுமோர் அற்புதமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்வழி முதலாம், நான்காம் ஆண்டு ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும் முதலாம், நான்காம் படிவ இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் ஊக்குவிப்புத் தொகையாக ரிம 100 வழங்கப்படும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விச் செலவைச் சமாளிக்க உதவும் நோக்கில் இத்தங்க மாணவர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பினாங்கு மக்கள் கூட்டணி அரசு, 2012ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இத்தங்க மாணவர் திட்டத்திற்காக ரி.ம 10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் தொடக்கக் கட்டமாகக் கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி பாடாங் கோத்தா ஸ்ரீ பினாங் மண்டபத்தில் சுமார் 224 மாணவர்களுக்கு ரி.ம 100 ஊக்குவிப்புத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. தகுதியுடைய மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங்கிடமிருந்து ரி.ம 100 ரொக்கப் பணத்தைப் பெற்றுச் சென்றனர். இவ்விழாவில் முதல்வர் உட்பட பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் டத்தோ மன்சோர் ஒஸ்மான், ஆட்சிக்குழு உறுப்பினர்களான மதிப்பிற்குரிய லிடியா ஒங், திரு எங் வெய் எக், திரு தெ இயு சியு, டத்தோ ஹஜி அப்துல் மாலிக், திரு நேதாஜி ராயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்’ என்பார்கள். எனவே, சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டும் என்றால் முதலில் சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும். அதன் நோக்கில் மாணவர்கள் சிறந்த பண்புநலன்களைக் கொண்டு கல்வியில் சிறக்க மாநில அரசின் இந்த ஊக்குவிப்புத் தொகை ஒரு தூண்டுகோளாக விளங்கும் என முதல்வர் தம் உரையில் நம்பிக்கை தெரிவித்தார். சுடர் விளக்காயினும் தூண்டுகோள் வேண்டும் என்ற பழமொழிக்கொப்ப மாணவர்களின் கல்விநலனில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமன்றி அரசாங்கத்தின் பங்களிப்பும் மிகவும் அவசியமாகிறது. கல்வியில் சிறந்து விளங்கினால் நிச்சயம் அதற்கான சன்மானமும் அங்கிகாரமும் கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் கண்ணும் கருத்துமாகப் படிப்பார்கள். இத்தங்க மாணவர் திட்டத்தின் பரிணாமமாக உயர்நிலைக்கல்வித் திட்டம் விளங்குகிறது. இது அரசாங்க உயர்க்கல்விக் கூடங்களில் தங்கள் மேற்படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு ரி.ம 1000 வழங்கும் திட்டமாகும். கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி சுமார் 262 மாணவர்களுக்கு இத்திட்டத்தின் வழி ரி.ம1000 வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்குத் தகுதியுடைய மாணவர்கள் http://ibita.penang.gov.my என்னும் அகப்பத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இவற்றைத் தவிர, மக்கள் கூட்டணியின் ஆக்ககரமான திட்டங்களில் வயது முதிர்ந்தோர் திட்டம், தங்கக்குழந்தை திட்டம், ஊனமுற்றோர் திட்டம், தனித்து வாழும் தாய்மார்கள் திட்டம், ஏழ்மை ஒழிப்புத் திட்டம் யாவும் அடங்கும்.

மாநில அரசு வழங்கிய ரி.ம 100ஐ பெற்றுக் கொண்ட ஸ்ரீ ரெலாவ் தேசியப் பள்ளியைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவன் நல்வின் நாயகம் தான் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாகக் கூறினார். அந்தப் பணத்தைப் பள்ளிச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்போவதாகத் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். நல்வினின் தாயார் மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட மக்கள் கூட்டணி அரசுக்கு தம் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொண்டார். புலாவ் திக்குஸ் கன்வென்ட் பள்ளியைச் சேர்ந்த முதலாம் படிவ மாணவியான அமுதா மாணிக்கம் தன் வங்கிச் சேமிப்புக் கணக்கில் இந்த நூறு ரிங்கிட்டைச் சேமித்து வைக்கப் போவதாகக் கூறினாள். அவளின் தாயார் திருமதி தனமேரி அவர்கள் இத்திட்டத்தின் வழி என்னைப் போன்ற குறைந்த வருமானம் பெறும் மக்கள் மிகவும் பயனடைவார்கள் என்றார். மேலும், தற்போதைய மாநில அரசின் கீழ்ச் செயலாக்கம் கண்டு வரும் பல அருமையான திட்டங்களைக் கண்டு தாம் பிரம்மிப்பதாகக் கூறினார்.

தங்க மாணவர் திட்டத்திற்குத் தகுதியுடைய மாணவர்கள் கீழ்க்காணும் முறையினைப் பின்பற்றிப் பதிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவர்களுக்கான தொகை தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கியின் மூலம் செலுத்தப்படும்.

தங்க மாணவர் திட்டம்

  • விண்ணப்பப் படிவம்- சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகம், மாவட்ட அலுவலகம், கொம்தார் 45ஆம் மாடியில் உள்ள சமூகநல அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
  • நிறைவு செய்த படிவத்தைச் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கவும்.
  • பினாங்கு மாநில ஆரம்பப்பள்ளிகளைச் சேர்ந்த ஒன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்களும் இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த ஒன்றாம் நான்காம் படிவ மாணவர்களும் பதியலாம்.
  • மாணவர் மலேசியக் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.
  • பினாங்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் பினாங்கு மாநிலத்தின் பதிவு பெற்ற வாக்காளர்களாக இருந்தால் பதிந்து கொள்ளலாம்.
  • தேவையான ஆவணங்கள்

– மாணவரின் பிறப்புப் பத்திர நகல் (கட்டாயம்)

– தாய்தந்தை இருவரின் அடையாள அட்டை நகல் (கட்டாயம்)

– மாணவரின் அடையாள அட்டை நகல் (இருந்தால்)