மாணவர்கள் எதிர்காலத்தில் சமுதாயத்திற்கு சேவையாற்ற இணக்கம் கொள்ள வேண்டும்

பிறை – ” இந்திய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பட்டம் பெற்று நிபுணத்துவமிக்க பணியில் அமர்ந்து திருமணம் பந்தத்தில் ஈடுபட்ட பிறகு தன்னை உயர்ந்த நிலைக்கு உருவாக்கிய இந்த சமுதாயத்திற்கு சேவையாற்றுவது நம் அனைவரின் கடமையாகும். ‘இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்என்பதற்குச் சான்றாக மாணவர்கள் தன்னலம் கொள்ளாமல் பொதுநலத்துடன் நம் சமுதாயத்திற்கு சேவை வழங்கி நம் சமுதாயத்தின் வெற்றியின் சின்னமாக விளங்க வேண்டும்,” என எஸ்.பி.எம் தேர்வு வழிக்காட்டிக் கருத்தரங்கில் கலந்து கொண்ட மலேசிய இந்து தர்ம மாமன்ற பினாங்கு மாநிலத் தலைவர் தனபாலன் இவ்வாறு சூளுரைத்தார்

இன்றைய கால இளைஞர்கள் சமயம் மற்றும் சமூகநலன் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வது மிகக் குறைவே. இந்நிலை மாறினால் மட்டுமே வருங்காலத்தில் தமிழர்களின் உரிமைக்கும் வளர்ச்சிக்கும் குரல் கொடுக்க சங்கங்கள் பாதுகாக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு மாநிலம், ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் மற்றும் தண்ணீர் மலை பாலதண்டாயுதபாணி ஆலய இணை ஏற்பாட்டில் எஸ்.பி.எம் தேர்வு வழிக்காட்டிக் கருத்தரங்கு இனிதே நடைபெற்றதுஇக்கருத்தரங்கில் நன்னெறிப் பாட குறித்த தேர்வு எழுதும் அணுகுமுறை மட்டுமின்றி தன்முனைப்புக் கருத்தரங்கும் இடம்பெற்றது. மேலும், இந்நிகழ்வில் பி40 குழுவைச் சேர்ந்த 270 மாணவர்கள் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வில் மலேசிய இந்து தர்ம மாமன்ற விஷ்ணு கோட்ட செயலாளர் தர்ம மாமணி தமிழரசன், மலேசிய இந்து தர்ம மாமன்ற பினாங்கு மாநில கல்விப் பிரிவுத் தலைவர் டாக்டர் சேகர் கலந்து கொண்டனர்

எஸ்.பி.எம் தேர்வு ஒவ்வொரு மாணவர்களின்  எதிர்கால பாதையை நிர்ணயிக்கிறது. பொதுவாகவே, சிறந்த தேர்ச்சிப் பெறும் மாணவர்கள் மேல் படிப்பை தொடர்கின்றனர்; அதேவேளையில் கல்வியில் பின் தங்கும் மாணவர்கள் வழி மாறிச்செல்கின்றனர். எனவே, தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் மனம் தளராமல் தொழிற்கல்வியில் தனது கல்வியைத் தொடரலாம். மேலும் வியாபாரத் துறையிலும் பீடுநடைப் போட்டு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் எடுத்துரைத்தார்


எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் சிறந்த அடைவுநிலைப் பெறும் பொருட்டு வருகின்ற செப்டம்பர் மாதம் மலாய் மொழி, ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று முதன்மை தேர்வுகளுக்கான வழிக்காட்டி கருத்தரங்கும் நடைபெறும். கடந்த மூன்று ஆண்டுகளாக எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு வழிக்காட்டிக் கருத்தரங்கு நடத்துவதன் மூலம் மாணவர்களின் தேர்வு முடிவுகளில் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்பது பாராட்டக்குறியது.

மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு மாநில கிளை நமது சமயத்தை வளர்ப்பது மட்டுமின்றி பாரம்பரியம், கலை மற்றும் கல்வியையும் மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கின்றனர். சிறு வயது முதல் சமய நெறியுடன் வளரும் பிள்ளைகள் கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்குவர். ஒவ்வொரு ஆண்டும் ஆரமப்பள்ளி மதிப்பீடு தேர்வு (யூ.பி.எஸ்.ஆர் ) முதல் மலேசிய உயர்கல்வி தேர்வு (எஸ்.தி.பி.எம்) வரை எழுதும் இந்திய மாணவர்கள் சிறந்த தேர்ச்சிப் பெறும் பொருட்டு தேர்வு வழிக்காட்டி கருத்தரங்கு இந்து தர்ம மாமன்றம் வழைநடத்துகிறது என்றால் மிகையாகாது. இந்துதர்ம மாமன்றத்தின் இந்த உயரிய இலக்கு வெற்றிப்பெற ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் நிதியுதவி வழங்கி உதவிக்கரம் நீட்டுவது பாராட்டக்குறியது.