மாண்புமிகு லிம் குவான் எங் மீண்டும் பினாங்கு முதல்வராகப் பதவியேற்றார்.

Admin
மாண்புமிகு லிம் குவான் எங் பினாங்கு முதல்வராகப் பதவி பிரமாணம் எடுக்கிறார்.

ஜோர்ஜ்டவுன் – ஜாலான் உத்தாமாவில் அமையப்பெற்றுள்ள பினாங்கு மாநில ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்ரீ முத்தியாராவில் பினாங்கு மாநில ஆளுநர் யாங் டிபெர்துவா துன் அப்துல் ரஹ்மான் அபாஸ் முன்னிலையில் உயர்திரு லிம் குவான் எங் மாநில முதல்வராகப் பதவி பிரமாணம் எடுத்தார். மனைவி பெட்டி சியு கெக் செங்குடன் வந்திருந்த 53 வயதான லிம் குவான் எங் முற்பகல் 11.30 மணியளவில் மாநில ஆளுநர் முன்னிலையில் மாநில அரசு செயலாளர் டத்தோ ஃபாரிசான் டாருஸ் பார்வையிட தம் பதவிக்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்.

தொடர்ந்து, இரண்டாம் தவணையாக மாநில முதல்வர் பொறுப்பை ஏற்கும் லிம் குவான் எங் ஆற்றல், பொறுப்பு, வெளிப்பாடு ஆகிய கொள்கையின் அடிப்படையில் மதம், இனம், அரசியல் பின்னணி எனும் பாரபட்சமின்றி அனைத்து மக்களையும் சமநிலையாகப் பார்த்துச் சிறந்த சேவையை வழங்க முற்படுவார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், பினாங்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தைப் பாராட்டு வண்ணம் இன்னும் அதிகமான சமூக நலன் சார்ந்த திட்டங்களை மேற்கொள்ள விருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பினாங்கு மாநில ஆளுநரின் மனைவி யாங்டிபெர்துவா தோ புவான் மஜிமோர் ஷாரிப்ஃ, ஜசெக கட்சியின் ஆலோசகரும் லிம் குவான் எங்கின் தந்தையுமான லிம் கிட் சியாங் அவர்தம் மனைவி, மக்கள் கூட்டணியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மனைவி டத்தின் ஸ்ரீ வான் அஜிசா, 13ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,  அரசு துறை அதிகாரிகள், என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இப்பொதுத் தேர்தலில் பினாங்கு மக்கள் கூட்டணி 30 சட்டமன்றங்களைக் கைப்பற்றிய வேளையில் தேசிய முன்னணி 10 சட்டமன்றங்களை மட்டுமே வென்றது.