மாநகர் & நகராண்மைக் கழக உறுப்பினர்களாக 8 இந்திய உறுப்பினர்கள் பதவிப்பிரமானம்

2018-ஆம் ஆண்டுக்கான பினாங்கு மாநகர் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களின் பதவிப்பிரமானம் நிகழ்வு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நகராண்மைக் கழக உறுப்பினர்கள் 1 ஜனவரி 2018 முதல் 30 ஜூன் 2018 வரை நகராண்மைக் கழக உறுப்பினர்களாகச் சேவையாற்றுவர். பினாங்கு மாநிலத்தில் இயங்கும் இரண்டு நகராண்மைக் கழகத்திலும் முறையே 47 பேர் உறுப்பினர்களாகப் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டனர்


செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் பதவிப்பிரமானம் கடந்த 2/1/2018ஆம் நாள் அக்கழக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்ட 24 உறுப்பினர்களில் நால்வர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் முறையே திரு மு.சத்திஸ், திரு டேவிட் மார்ஷல், திரு ஜோன்சன் மற்றும் திரு குமார்.


சிறுதொழில் முனைவோருக்கு குறிப்பாக அங்காடி வியாபாரங்களில் ஈடுப்படும் இந்திய வியாபாரிகளுக்கு நகராண்மைக் கழக உரிமம் பெற்றுக் கொடுப்பதை இவ்வாண்டுக்கான தலையாய நோக்கமாக கொண்டுள்ளதாக ஆறாவது முறையாக செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினராக பதவியேற்றுள்ள சத்தீஸ் முனியாண்டி கூறினார்.


ஐந்தாவது முறையாக நகராண்மைக் கழக உறுப்பினராக பதவியேற்றுள்ள டேவிட் மார்ஷல் செபராங் பிறையில் ஏற்படும் சமூகப் பிரச்சனைகள் குறிப்பாக இளைஞர்களுக்கிடையே நிகழும் தகாத செயல்களிலிருந்து பாதுகாக்க எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். பெருநிலப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் விளையாட்டு மைதானங்களை நள்ளிரவு மணி 12.00 முதல் அதிகாலை 5.00 வரை பயன்பாட்டிற்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். ஏனெனில் இளைஞர்கள் விளையாட்டு மைதானத்தை தளமாக கொண்டு தகாத செயல்களில் ஈடுப்படுகின்றனர் என்றார்.

பெருநிலப்பகுதியில் குறிப்பாக பாகான் டாலாம் பகுதியில் ஏற்படும் வெள்ள நிவாரணத் திட்டம் குறிப்பாக முறையான வடிக்கால் அமைக்கத் திட்டமிடுவதாக நகராண்மைக் கழக உறுப்பினராக பதவியேற்றுள்ள திரு குமார் கூறினார்.
பினாங்கு மாநகர் கழக உறுப்பினர் பதவிப்பிரமானம் நிகழ்வு கடந்த 3/1/2018-ஆம் நாள் பாடாங் கோத்தா மாநகர் கழக அரங்கில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்ட 23 உறுப்பினர்களில் நால்வர் இந்தியர்கள் என்பது சாலச்சிறந்தது. அவர்கள் முறையே திரு ஆ.குமரேசன், திரு ஹர்விந்தர், திருமதி கலா மற்றும் திரு ஜோ.பிரான்சிஸ்.

பினாங்கு மாநகர் கழக உறுப்பினராக பதவியேற்றுள்ள திரு.குமரேசன் பினாங்கு மாநில அரசுடன் இணைந்து பொது வசதிகள் குறிப்பாக பொதுச் சந்தை மற்றும் விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்த எண்ணம் கொண்டுள்ளதாக தெரிவித்தார். இவ்வாண்டு பத்து உபான் பகுதியில் கூடுதலான கண்காணிப்பு கேமரா மற்றும் சாலை விளக்குகள் பொருத்த திட்டமிட்டுள்ளார். இதன்வழி அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என மேலும் சொன்னார். கடந்த ஆண்டுகளில் பாயான் பாரு பகுதியின் பொதுச் சந்தை மற்றும் விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தியுள்ளார் என்றால் மிகையாகாது.

மூன்றாவது முறையாக பினாங்கு மாநகர் கழக உறுப்பினராக பதவியேற்றுள்ள திருமதி.கலா துரைராஜ் இவ்வாண்டு மாநகர் கழகத்தில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகள் பற்றிய பட்டறைகள் நடத்த இலக்கு கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் இளைஞர்கள் தங்களின் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் பெற இலகுவாக அமையும்.

தனித்துவாழும் தாய்மார்கள் சிறுதொழில் செய்ய குறிப்பாக உணவகம் பெற்று கொடுக்க முயற்சிக்கவிருப்பதாக கூறினார்.