ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை
ரிம916 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் வசூலை வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளது.
இந்த தொகை, மாநில வருவாய் வசூல் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ரிம906.59 மில்லியனை விட அதிகமாக உள்ளதாக முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
“இன்று (2025 நவம்பர்,14) நிலவரப்படி, மாநில அரசு ரிம916,254,473.44 வருவாய் வசூலை வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளது என்பதை இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தெரிவித்துக் கொள்கிறேன்.
“நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக வசூலிக்கப்பட்ட வருவாய், ஒருங்கிணைந்த வருவாய் கணக்கில் சேமிப்பை அதிகரித்து, மாநில அரசு சரியான வழியில் முன்னெடுத்துச் செல்வதை உறுதி செய்கிறது.
“உண்மையில், மாநில அரசின் பொதுச் சேவை ஊழியர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன், இந்த ஆண்டு இறுதிக்குள் ரிம1 பில்லியனுக்கும் அதிகமான மொத்த வருவாய் வசூலை அடைய மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது. இந்த அடைவுநிலை 2016-ஆம் ஆண்டில் ரிம1.029 பில்லியன்
எட்டப்பட்டது,” என்று முதலமைச்சர் 2026 ஆண்டுக்கான பினாங்கு மாநில வரவு செலவு திட்டத்தை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது கூறினார்.
இதற்கிடையில், நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், மாநில நிர்வாகத்தின் பணி கொள்கையின் ஒரு பகுதியாக செயல்திறன், பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை (CAT) கொள்கைகளையும் மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்துகிறது, என்றார்.
எனவே, 2024 ஆம் ஆண்டுக்கான பினாங்கு மாநில அரசின் நிதி அறிக்கை, 2025 ஆகஸ்ட் 7ஆம் அன்று தேசிய தலைமை கணக்காய்வாளர் சான்றிதழ் பெற்றுள்ளது, அதில் எந்த குற்றச்சாட்டு அல்லது அறிவுறுத்தலும் இல்லாமல் பெற்றுள்ளது.
“ஆகையால், நிதி அறிக்கைகளைத் தணிக்கை செய்வதில் பினாங்கு தொடர்ந்து சிறந்த மாநிலமாக இருப்பதை உறுதி செய்வதில் மாநில நிதித் துறையுடன் (JKN) ஒத்துழைப்பு நல்கும் அனைத்து மாநில பொதுச் சேவை ஊழியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று சாவ் தமது நன்றியை நவிழ்ந்தார்.