மாநில அரசு சேவை 316 ஊழியர்களுக்கு அங்கீகாரம்செபராங் ஜெயா – 21 துறைகளைச் சேர்ந்த 316 பினாங்கு மாநில அரசு ஊழியர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சேவை விருதை (APC) பெற்றனர்.
“பொதுச் சேவை துறை உருமாற்றம், பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வையை இயக்குதல்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற விழாவில், இந்த விருதை மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அரசு ஊழியர்களுக்கு வழங்கி கெளரவித்தார்.
பினாங்கு மாநில அரசு செயல்படுத்தும் அனைத்து உருமாற்ற முன்முயற்சிகளுக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தொடர்ந்து வலுவான ஆதரவை வழங்குவார்கள் என்று கொன் இயோவ் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.
பொதுச் சேவை துறையின் ஊழியர்கள் சிறந்த திறமையுடன் செயல்பட்டு, மக்களுக்கும் மாநிலத்திற்கும் முழுமையாக பங்களிக்கக்கூடிய வகையில், நிறுவனங்களின் நடைமுறைகள் மற்றும் பணித் திட்டங்களை மேம்படுத்த உறுதியாக இருக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்தார்.
மாநில அளவில், பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வையை ஒரு வளமான, முற்போக்கான மற்றும் நிலையான இலக்கை அடைய செயல்படுத்த வேண்டும்.
“இந்த இலக்கை ஆதரிக்க, பினாங்கு மாநில அரசு நிர்வாகம் C4 முன்முயற்சியை செயல்படுத்தியுள்ளது, இது திட்டங்கள் மற்றும் நிறுவன உருமாற்றங்களை துரிதமாக செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மூலோபாய அணுகுமுறையாகும். இதனால் மிகவும் திறமையான, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் மக்களின் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் சிறந்த மாநில பொதுச் சேவை துறையாக உருவாகுகிறது,” என்று அவர் கூறினார்.
நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், சராசரியாக, C4 செயல்படுத்தலின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் 2025, ஜூன்,30 வரை 100 விழுக்காடு வெற்றிகரமாக அடைந்துள்ளன, என்றார்.
“மேலும், அதன் அசல் இலக்குகளை தாண்டி பல சாதனைகள் பதிவு செய்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஆரம்ப இலக்கான 50 உடன் ஒப்பிடும்போது 124 கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டுள்ளன.”
கூடுதலாக, பொதுச் சேவை துறையில் திறந்த தரவு போர்ட்டலில் மொத்தம் 179 தரவுத் தொகுப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன, இது 177 என்ற இலக்கையும் தாண்டியுள்ளது.
“பினாங்கு மாநிலச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் உள்ள துறைகள் மற்றும் நிறுவனங்களால் சிறந்த நிலை, சான்றிதழ்கள் மற்றும் விநியோக முறையின் செயல்திறனுக்கான விருதுகள் 100 அங்கீகாரங்களின் இலக்கோடு ஒப்பிடும்போது
மொத்தம் 102 அங்கீகாரங்கள் பெறப்பட்டுள்ளன, ,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த விழாவில் பினாங்கு மாநில செயலாளர் டத்தோ சுல்கிஃப்லி லாங்; மாநில நிதி அதிகாரி டத்தோ சபிடா சஃபார்; மாநில சட்ட ஆலோசகர் ஷாமியா பிலால்; மற்றும் மாநில துறைகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், சிறந்த சேவை விருது என்பது வெறும் சான்றிதழ் மற்றும் வெகுமதி மட்டுமல்ல, மாநில அரசு அதன் ஊழியர்கள் காட்டும் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு வழங்கும் ஒரு உண்மையான அங்கீகாரமாகும் என்று சுல்கிஃப்லி கூறினார்.
“இந்த விருது பெறுபவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பினாங்கு அரசு ஊழியர்களுக்கும் தொடர்ந்து சிறந்து சேவை வழங்குவதற்கான மன உறுதியை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
அரசு ஊழியர்கள்,
கொள்கை அமலாக்கத்திற்கும் மக்களின் நம்பிக்கைகளுக்கும் முதுகெலும்பாக திகழ்கின்றனர். மேலும், தற்கால துரித வளர்ச்சியை எதிர்கொள்ளும்போது, பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வை மற்றும் குடிமை மலேசியாவின் உணர்வுக்கு ஏற்ப நாம் உருமாற்றம் காண வேண்டும்,” என்று அவர் கூறினார்.