புக்கிட் தெங்கா – பினாங்கு மாநில அரசாங்கம், பங்குதாரர்கள் மூலம் ஐந்தாம் குறியீட்டு வரை மாசுபட்டுள்ள ஜூரு ஆற்றை சுத்தம் செய்து மீட்டெடுக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ கூறுகையில், ஜூரு ஆறு வெறும் நீர்வழி மட்டுமல்ல, அது மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு உயிர்நாடியாகவும், பொருளாதார வளமாகவும், பல்வேறு நீர்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும் திகழ்கின்றது, என்றார்.
“இருப்பினும், தொழிற்சாலை கழிவுகள், வீட்டுக் கழிவுகளைக் கொட்டுதல் மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பு விழிப்புணர்வு இல்லாமை காரணமாக இந்த ஆறு நீண்ட காலமாக மாசுபாட்டின் சுமையைச் சுமந்து வருகிறது.”
“ஜூரு ஆற்றின் நீரின் தரம் ஐந்தாம் குறியீட்டில் இருப்பதாக அறிக்கை காட்டுகிறது. இது ஆறு மிகவும் மாசுபட்டுள்ளது மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு பொருத்தமற்றது என்பதைக் காட்டுகிறது.
“எனவே, மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப்பணி திட்டம் இந்த ஆற்றினை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் பகிரப்பட்ட பொறுப்பையும் ஏற்படுத்துவதாகும்.”
“மாணவர்கள், பெற்றோர்கள், தொழில்துறை ஊழியர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை சமூகத்தின் பல்வேறு மட்டங்களின் ஈடுபாட்டைக் கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன், அனைவரும் ஓர் உன்னதமான காரணத்திற்காக களத்தில் இறங்குகிறார்கள்,” என்று அண்மையில் மத்திய செபராங் பிறை ஜூரு ஆற்றினை தூய்மைப்படுத்தும் துப்புரவுப்பணி திட்டத்தில் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு இதனைத் தெரிவித்தார்.
பினாங்கு நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் (JPS) இயக்குநர், லெப்டினன்ட் கர்னல் (அசோசியேட்), ஊய் சூன் லீ; மத்திய செபராங் பிறை மாவட்ட நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் பொறியாளர், இணை கேப்டன் (PA) Ts. சையத் முகமது சியாஹிர் சையத் மஸ்லான்; செபராய் பிறை மாநகர் கழக (MBSP) கவுன்சிலர்,
ரேச்சல் தே சுவான் இன் மற்றும் ஜூரு ஆட்டோசிட்டி குழுமத்தின் இயக்குநர்
இயக்குநர், கேரி தியோ கியாங் ஹொங் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், 130 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய இந்த துப்புரவுப்பணியில் 788 கிலோகிராம் (கிலோ) குப்பைகள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டதாக சூன் லீ தெரிவித்தார்.
“இத்திட்டத்தை வருடத்திற்கு நான்கு முறை நடத்த திட்டமிட்டுள்ளது.
“இந்த முயற்சியில் உள்ளூர் சமூகம், மாநிலத் தலைவர்கள், சுற்று வட்டார நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபடும்,” என சூன் லீ நம்பிக்கை தெரிவித்தார்.
“ஏனென்றால் பூமியின் பொக்கிஷங்களான ஆறுகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மாநில நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையிடம் மட்டுமே இல்லை,” என்று அவர் முத்துச் செய்திகள் நாளிதழிடம் தெரிவித்தார்.
ஜூரு ஆற்றினை சுத்தம் செய்வதற்கான ஒதுக்கீட்டை மாநில அரசு ரிம2.293 மில்லியனாக (2024 இல்) உயர்த்தியுள்ளது என அறியப்படுகிறது. இது முந்தைய ஆண்டு ரிம1.725 மில்லியனுடன் ஒப்பிடும்போது 24.7 சதவீதம் அதிகமாகும்.
பல்வேறு தரப்பினருடன் இணைந்து, தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் ‘ஆற்றில் அல்லது பிற இடங்களிலும் குப்பைகளை வீசுவதற்குத் தடை’ குறித்து சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் JPS தொடர்ந்து பாடுபடும்.
இதற்கிடையில், ஜூரு ஆற்றில் குப்பை சேகரிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் 250 கிலோவிலிருந்து 2025 மே மாதத்தில் 788 கிலோவாக அதிகரித்தது குறித்து சுவான் யீன் சில கவலைத் தெரிவித்தார்.
“சேகரிக்கப்பட்ட கழிவுகளை ஆய்வு செய்தபோது, அது வீட்டுக் கழிவுகள், குறிப்பாக பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், பாலிஸ்டிரீன் பெட்டிகள், பயன்படுத்தப்பட்ட காலணிகள், உலோக கேன்கள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
“எனவே, தினசரி கழிவுகளை நிர்வகிப்பதில் அனைத்து தரப்பினரும், குறிப்பாக உள்ளூர்வாசிகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.