மாநில அரசு மகப்பேறு பராமரிப்பு மையங்களுக்கான வழிகாட்டி அறிமுகம்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு முதன்முறையாக மாநிலத்தில் மகப்பேறு பராமரிப்பு மையங்களை இயக்குவதற்கான வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சமூக மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங், மகப்பேறு பராமரிப்பு மைய வழிநடத்துநர்கள் பதிவு விண்ணப்பிப்பம் மூலம் முறையான அனுமதி பெறும் வகையில் வழிகாட்டி வடிவமைக்கப்பட்டுள்ளன, என்றார்.

“இந்த வழிகாட்டி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இதன்வழி தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியும்.

“பினாங்கு மாநில அரசு மக்களின், குறிப்பாக தாய்மார்கள் அல்லது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

“எனவே, இந்த வழிகாட்டி மூலம் அனைத்து தரப்பினருக்கும் முறையான சூழ்நிலையை உருவாக்க மாநில அரசாங்கத்தால் முடிந்த அனைத்தையும் செய்வோம்,” என்று அவர் கொம்தார் அரங்கில் இதன் தொடர்புடைய வழிகாட்டி குறித்த விளக்கக் கூட்ட அமர்வில் இவ்வாறு உரையாற்றினார்.

சுங்கை பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம் மற்றும் பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் (PWDC) தலைமை நிர்வாக அதிகாரி ஓங் பீ லெங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எனவே, அனைத்து நடத்துநர்களும் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி இணங்க ஒன்றிணைந்து செயல்படவும், அந்தந்த பராமரிப்பு மையங்களுக்கு உடனடியாக முறையான அனுமதிப் பெறவும் அறிவுறுத்தப்படுவதாக, சோங் எங் கூறினார்.

“பதிவு செயல்முறையை தாமதப்படுத்த வேண்டாம், ஏனெனில் இது பினாங்கு மாநில அரசு அனைத்து தொழில்முனைவோருக்காக வழங்கிய பொன்னான வாய்ப்பாகும்.

“அனைத்து நடத்துநர்களும் மகப்பேறு பராமரிப்பு மையங்களை மாநில அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு முன் பதிவு செய்ய வேண்டும்.

“அதே நேரத்தில், பினாங்கு மாநகர் கழகம் மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் ஆகிய இரண்டும், இந்த வழிகாட்டியை தெளிவாகப் புரிந்து கொண்டு, மேலும் தொழில்முனைவோர் தங்கள் இயக்க அனுமதிகளைப் பெற உதவ வேண்டும்,” என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

மேலும் கருத்து தெரிவித்த சோங் எங், வழிகாட்டி பற்ரிய தகவல் மலாய் மற்றும் சீன மொழிகளில் வழங்கப்பட்டுள்ளன, என்றார்.

“தொழில்முனைவர் இந்த வழிகாட்டியை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதையும் கடைப்பிடிப்பதையும் எளிதாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டியைப் பெற ஆர்வமுள்ளவர்கள், அவருடைய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளைத் தொடர்புக் கொள்ளலாம், என்றார்.

“மாநில அரசு இந்த வழிகாட்டியை வழங்கியிருந்தாலும், எம்.பி.பி.பி மற்றும் எம்.பி.எஸ்.பி தத்தம் செயல்பாடு இயக்க உரிமங்களை வழங்குவதற்கான அதிகாரம் இருக்கிறது,” என்று அவர் விளக்கினார்.