மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் – சத்தீஸ்

Admin

பிறை – மாநில அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் அண்மையில் மாற்றுத்திறனாளிகளுக்கான (OKU) வேலை வாய்ப்புக் கண்காட்சியை நடத்தியது. இந்தக் கண்காட்சியில் எட்டு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்த ஆண்டு ஆறாவது முறையாக நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தொழிலியல் கண்காட்சி, இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அலுவலம்,
Penexpo Events Sdn. Bhd தனியார் நிறுவனம் மற்றும் மாநில அரசின் இணை ஏற்பாட்டில் நடைபெற்றது.

“மாற்றுத்திறனாளிகளில் பலர் சமூகநலத் துறையிலிருந்து (ஜே.கே.எம்) உதவித்தொகை பெறுகிறார்கள். இருப்பினும், அவர்களின் அன்றாட செலவினத்திற்கு இந்த மாதாந்திர உதவித்தொகை போதுமானதாக இல்லை.

“எனவே, அவர்களுக்குப் பொருத்தமான வேலை வாய்ப்பு ஏற்படுத்தவே மாநில அரசு இக்கண்காட்சியை ஏற்று நடத்துகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரண தொழிலாளர்களுக்கும் இணையான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகளைத் திறக்கும் வகையில் இந்தக் கண்காட்சி அடித்தளமாகத் திகழ்கிறது. மாற்றுதிறனாளிகளிடையே ஒரு நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் சமூகத்தில் உள்ளவர்களை ஒருங்கிணைக்கவும் இக்கண்காட்சி உதவும்.

 

மாநில அரசு வேலை தேடும் மாற்றுதிறனாளிகளின் முன்னேற்றத்திற்குக் கூடுதல் கவனம் கவனம் செலுத்துகிறது என்பதை இக்கண்காட்சி புலப்படுத்துகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நிறுவனங்களுக்கு இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்ள இலவசமாக இடத்தையும் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

“ஆகவே, மாற்றுத்திறனாளிகள் மனம் தளராமல் உங்களிடம் இருக்கும் திறனைக் கண்டறிந்து உணர முயற்சிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகளையும் சிறப்பு உதவிகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என இரண்டாம் துணை முதல்வரை பிரதிநிதித்து இக்கண்காட்சியை தொடங்கி வைத்தப் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி கோரிக்கை விடுத்தார்.

மேலும் பேசுகையில், மாற்றுதிறனாளிகளைப் பணி அமர்த்தும்போது பயிற்சித் திட்டங்கள் மற்றும் கூடுதல் ஆதரவு மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்க முனையும் இந்த நிறுவனங்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ‘இடம் மற்றும் பயிற்சி’ மற்றும் ‘இரட்டை தொழில் பயிற்சி’ போன்ற திட்டங்களை கொண்டு வர தனியார் துறையுடன் அரசு எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதனை புதிய அரசாங்கம் ஓர் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்தார். மாற்றுத்திறனாளிகளும் STEM தொடர்புடைய கல்வி மற்றும் தொழில்களில் ஈடுபட ஊக்குவிப்பதில் அரசாங்கம் முன்முயற்சி எடுக்க வேண்டும் எனவும் சத்தீஸ் வலியுறுத்தினார்.