முதலமைச்சர் நியமன விவகாரத்தில், மாநில அரசியலமைப்புச் சட்டம் குறித்து விளக்கம் – சாவ்

Admin
KETUA Menteri

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், மாநிலத் தேர்தலுக்குப் பிறகு (பி.ஆர்.என்) மீண்டும் முதலமைச்சர் பதவிக்கு வரலாம் என்ற சர்ச்சையை ஏற்படுத்தும் தரப்பினர் மாநில அரசியலமைப்பில் உள்ள விதிகளைப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.

பினாங்கு மாநில அரசியலமைப்பின் 7வது பிரிவு, பிரிவு 2 (a) (ii) இன் விதியின் அடிப்படையில் எந்த காலத்திலும் ஒருவர் முதலமைச்சராக இரண்டு முறை அந்தப் பதவியை வகிக்காதவரே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது என
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் விளக்களித்தார்.

“இந்தப் பிரச்சனையை சர்ச்சையாக்குவது யார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் மாநில அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பற்றி விளக்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

“மாநில தேர்தலுக்குப் பிறகு குவான் எங் மீண்டும் முதலமைச்சராக வரலாம் என்ற சர்ச்சையை ஏற்படுத்தும் தரப்பினர் உண்மையில் மாநில அரசியலமைப்பில் உள்ள தெளிவான விதிகளைப் புரிந்து கொள்ளவில்லை. மேலும், இந்த விளக்கத்துடன் சர்ச்சையை ஏற்படுத்த
முயற்சிப்பவர்கள் இந்த தகவலை அரசியல் கல்வியாகப் பெற்றுக் கொள்ளுங்கள்,” என்று கொம்தாரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரும், பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் இவ்வாறு பதிலளித்தார்.

வருகின்ற மாநிலப் பொதுத் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பாதுகாக்க பக்காத்தான் ஹராப்பான் (PH) மற்றும் தேசிய முன்னணி (BN) ஆகியவற்றின் இரட்டைக் கூட்டணியை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் சாவ் வலியுறுத்தினார்.

பினாங்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், ஜனநாயக செயல்கட்சியின் (டி.ஏ.பி) மாநிலத் தலைவருமான கொன் இயோவ், நேற்று, முதலமைச்சரை மாற்றும் முயற்சியை மறுத்து 10 மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் (ADUN) அறிக்கைக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை, மாநிலத் தேர்தலுக்குப் பிறகு கொன் இயோவை முதலமைச்சராக மாற்றும் முயற்சியில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாக ஒரு ‘ஆன்லைன் போர்டல்’ தெரிவித்தது.

“எந்த நேரத்திலும் இரண்டு முறை முதலமைச்சர் பதவியை வகிக்காதவர் மட்டுமே முதலமைச்சர் பதவியை ஏற்க முடியும் என மாநில அரசியலமைப்பு திருத்தம் பிப்ரவரி 1, 2019 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது, என சாவ் தெளிவுப்படுத்தினார்.

பினாங்கு மாநில அரசியலமைப்பை திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு 11 ஜூன் 2018 அன்று பினாங்கு மாநில சட்ட ஆலோசகர் அலுவலகம் மூலம் அரசுத் தலைமை வழக்குரைஞரியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், பினாங்கு மாநில அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட திருத்தம் அந்த ஆண்டின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்த அரசாங்கக் கூட்டத் தொடரிலும் விவாதிக்கப்பட்டது.இறுதியாக, பினாங்கு மாநில அரசியலமைப்பின் 7வது சட்டப்பிரிவு, இத்திருத்தத்தின் மூலம், சம்பந்தப்பட்ட உறுப்பினர் இரண்டு தவணை முதலமைச்சராக பதவி வகித்திருந்தால், மீண்டும் முதலமைச்சராக நியமிக்க முடியாது, என்றார்.