ஜார்ச்டவுன் – பாடாங் கோத்தா லாமா வளாகத்தில் நான்காவது முறையாக முத்துச் செய்திகள் தினம் அரசு மலேசிய கடற்படை (RMN) உடன் இணைந்து மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மாநில ஆளுநர் துவான் யாங் உத்தாமா (TYT) துன் ரம்லி ங்கா தாலிப் மற்றும் அவரது துணைவியார் தோ புவான் ராஜா நூரா ஆஷிகின் ராஜா அப்துல்லா இன்று அதிகாலை நடைபெற்ற மரியாதைக்குரிய அணிவகுப்பு மற்றும் இராணுவ இசைக்குழுவின் சடங்கில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் மற்றும் அவரது துணைவியார் புவான் டான் லீன் கீ; பினாங்கு மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ ஸ்ரீ லாவ் சூ கியாங்; கடற்படைத் தலைவர் அட்மிரல் டான் ஸ்ரீ டாக்டர் சுல்ஹெல்மி இத்னைன் மற்றும் பிற மாநில பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மேலும், நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், பிற்பகலில் முத்துச் செய்திகள் தினம் 4.0, அரசு கடற்படை உடனான நிறைவு விழாவை அதிகாரப்பூர்வ நிறைவுச் செய்தார்.

“இன்றைய நிகழ்ச்சி மலேசிய கடற்படையின் பங்கேற்பு மட்டுமின்றி, அனைத்துலக கடற்படை பங்களிப்புடன் இணைந்து நடைபெற்றதால் பிரமாண்ட விழாவாக இடம்பெற்றது. இந்நிகழ்ச்சி கடந்த 1990, மே,19 அன்று பினாங்கில் நடைபெற்ற ஆசியான் கடற்படை நகர அணிவகுப்பை (ANCP) மீண்டும் உயிர்ப்பித்தது என்று கூறினார்.
“இன்றைய தினக் கொண்டாட்டத்தில், கடல்சார் நடவடிக்கைகள், அணிவகுப்பு நிகழ்ச்சிகள், கடற்படை இசைக்குழுக்கள் மற்றும் பல்வேறு கண்காட்சி அரங்குகளைக் காண பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி, தாய்லாந்து, மியான்மார், வியட்நாம், இந்தோனேசியா, புரூணை, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடற்படை குழுக்களின் பிற்பகல் தொடர்ச்சியான மேடை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை மகிழ்வித்தன,” என்று பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினரும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கூறினார்.

கூடுதலாக, இந்த முறை பினாங்கு கடற்கரையில் நங்கூரமிடப்பட்டுள்ள 10 போர்க்கப்பல்கள் உட்பட பிராந்திய கடற்படை சொத்துக்களின் நுட்பத்தை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், கடல்சார் பாதுகாப்புப் படைகளின் திறன்களை மக்கள் நெருக்கமாகப் பார்ப்பதற்கு ஒரு அசாதாரண அனுபவத்தையும் வழங்குகிறது என்று அவர் கூறினார்.

“இந்த முயற்சி பினாங்கை ஒரு முற்போக்கான மற்றும் சிறந்த மாநிலமாக உருமாற்றம் காணும் பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வையின் உணர்வோடு பிரதிபலிக்கிறது.
முத்துச் செய்திகள் தினம் இப்போது அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் பிரமாண்ட விழாவாக காணும் வகையில் மேம்பாடு அடைந்துள்ளது,” என்றார்.

வருகின்ற ஐந்தாம் பதிப்பு முத்துச் செய்திகள் தினக் கொண்டாட்டம் மிக பெரியதாகவும், அர்த்தமுள்ளதாகவும், அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியை வெற்றியடையச் செய்த அரசு கடற்படை, நட்பு நாடுகள், ஊடகக் குழுவினர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“இந்த நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஒன்றிணைத்துள்ளது. கிழக்கு மலேசியாவிலிருந்து முத்துச் செய்திகள் வெளியீட்டின் இளம் ரசிகர்கள் உட்பட, ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வருகையளித்தது மன மகிழ்ச்சியை அளிக்கிறது.
“பினாங்கு மக்களுக்கான தகவல் தொடர்பு தளமாக விளங்கும் முத்துச் செய்திகள் நாளிதழ் அதன் பங்கை மேலும் வலுப்படுத்துவதில் இம்மாதிரியான கொண்டாட்டம் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது,” என்று அவர் விளக்கினார்.
அரசு கடற்படை இசைக்குழு மற்றும் அணிவகுப்பைத் தவிர, விரைவு போர் கடல் படகு மற்றும் வான் ஹெலிகாப்டர் போன்ற பிற அற்புதமான நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.
அது மட்டுமல்லாமல், பல்லின கலாச்சார நிகழ்ச்சிகள், ‘போரியா ஓமரா’, ‘பினாங்கு சிங்கே சங்க படைப்புகள்’, பல்வேறு நிறுவன கண்காட்சிகள் மற்றும் விற்பனை நிலையங்கள் ஆகியவை இன்றைய தின விழாவின் உற்சாகத்தை அதிகரித்தன.
இந்நிகழ்ச்சியின் நிறைவில், வர்ணம் தீட்டும் போட்டி, முன் வரிசை பணியாளர்களுக்கான ஆடை அலங்கார போட்டியின் வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், அதிர்ஷ்ட குலுக்கல் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு, அதில் முதல் நிலை பரிசான ஒரு புதிய மோட்டார் சைக்கிளையும் வருகையாளர்கள் தட்டிச் சென்றனர்.