முன் வரிசை பணியாளர்களுக்கு கூடுதல் 3 பி.பி.வி செயல்படுத்த விரைவில் அங்கீகரிக்க வேண்டும்

Admin

சுங்கை பாக்காப் – பினாங்கு மாநிலத்தில் பொது-தனியார் கூட்டாண்மை தொழில் நோய்த்தடுப்பு திட்டத்தின் (PIKAS) கீழ் மேலும் மூன்று தடுப்பூசி மையங்களை (பி.பி.வி) செயல்படுத்துவதற்கான ஒப்புதல் விண்ணப்பம் விரைவில் அங்கீகரிக்கப்படும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ், இத்திட்டத்தின் மூலம் இம்மாநிலத்தின் சுமார் 300,000 பொருளாதார முன் வரிசை பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தடுப்பூசிகளைப் பெற துணைபுரியும் என்று கூறினார்.

“PIKAS திட்டத்தின் கீழ் இரண்டு பி.பி.வி மையங்கள்  கடந்த ஜூன்,16 முதல் புக்கிட் ஜாவி, கோல்ஃப் & ரிசார்ட்டிலும், ஜூன்,28 முதல் எக்குவடோரியல் தங்கும் விடுதியிலும் செயல்படத் தொடங்கினர்.

“பல தொழிற்சாலைகளின் முன்முயற்சியின் பேரில், பினாங்கு மாநிலத்தில் PIKAS திட்டத்தை துரிதப்படுத்த  மேலும் மூன்று  பி.பி.வி மையங்கள் செயல்படத் தயாராக உள்ளன.

“எனவே, மாநில அரசு இத்திட்டத்தை செயல்படுத்த அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திற்கு (எம்.ஐ.டி.ஐ) 

ஒப்புதல் பெற விண்ணப்பக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளது,” என்று புக்கிட் ஜாவி, கோல்ஃப் & ரிசார்ட் தளத்தில்  பொருளாதாரத் துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார். 

எம்.ஐ.டி.ஐ அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது அஸ்மின் அலி; மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகரும், சுங்கை பக்காப் மாநில சட்டமன்ற உறுப்பினருமான, டத்தோ டாக்டர். அமர் பிரித்திபால் அப்துல்லா; ஜாவி சட்டமன்ற உறுப்பினர், ஜேசன் ஹாங் மூய் லாய் மற்றும் புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர், கோ சூன் ஐக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பினாங்கு மாநில  தொழில்துறை பிரிவில் ஏராளமான ஊழியர்கள் உள்ளனர். எனவே, தடுப்பூசி செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு போதுமான பி.பி.வி மையங்கள் செயல்படுத்த வேண்டும் என்று கொன் யாவ் கூறினார்.

முகமது அஸ்மின் தனது தரப்பினர் மூன்று கூடுதல் பி.பி.வி செயல்பாடு ஒப்புதல் குறித்து மாநில அரசின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் என்று கூறினார்.

கடந்த  ஜூன்,16 அன்று தொடங்கப்பட்ட PIKAS திட்டத்தின் கீழ் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் நான்கு முக்கிய மாநிலங்களான பினாங்கு, சிலாங்கூர், ஜோகூர் மற்றும் சரவாக் ஆகியவை இடம்பெறுகின்றன.

“எனவே, இந்த நான்கு மாநிலங்களில் ஆறு பொது பி.பி.வி மையங்கள் குறிப்பாக புக்கிட் ஜம்புல் அருகிலுள்ள எக்குவடோரியல் தங்கும் விடுதி உட்பட பல பொது பி.பி.வி பெருந்திட்டமாக செயல்படுத்த இணக்கம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன் மூலம், சிறு நிறுவனங்களும் நன்மை பெற வழி வகுக்கும். 

“இந்த PIKAS  திட்டம்  எதிர்காலத்தில் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும். ஏனென்றால்,  பொருளாதார முன் வரிசை பணியாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை  வழங்குவது மத்திய அரசின் பொறுப்பாகும்,” என்று அவர் விளக்கினார்.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கிய முதல்வருக்கும் பினாங்கு மாநில அரசிற்கும் அஸ்மின் அலி நன்றி தெரிவித்தார்.

“இந்த ஒத்துழைப்பு திட்டமிட்டபடி சமூக நோய் எதிர்ப்பு சக்தி இலக்கை அடையும் வரை தொடரும் என்று,” நம்பிக்கை தெரிவித்தார்.

பி.பி.வி புக்கிட் ஜாவி கோல்ஃப் & ரிசார்ட் (ஜூன்,16) செயல்பட்டதில்  மொத்தம் 960 தொழில்துறை தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது என அறிவிக்கப்பட்டது.