யோகா உடல், மனம், உணர்ச்சியை ஒருமுகப்படுத்தும் சிறந்த கலை

Admin

யோகா என்பது உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது மட்டுமின்றி ஒருமுகப்படுத்தும் சிறந்த கலையாகும். இது உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நோக்கி பயணிக்க
உதவும் சிறந்த ஆன்மீக மார்க்கமாகும்.

மெஸ்பன் ‘கலைமாமணி’ விருதினை மாஸ்டர் இராஜலட்சுமி பெற்றார்.

“பொதுவாகவே, யோகா ஒரு உடற்பயிற்சியாகக் கருதப்படுகிறது. மாறாக யோகாசனப் பயிற்சியை முறையாக செய்யும் போது உடலையும் அதனுடன் மனத்தையும் ஒருநிலைப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வித்திடும்,” என யோகா மைண்ட் மையத்தின் தொற்றுநரும் இயக்குநருமான இராஜலட்சுமி கூறினார்.

யோகா மைண்ட் மையத்தின் மாணவர்கள் குழு முறையில் யோகா பயிற்சி மேற்கொள்கின்றனர்.

யோகா பயிற்றுனரான இராஜலட்சுமி கடந்த 10 ஆண்டுகளாக யோகா பயிற்சி மட்டுமின்றி யோகா தெரப்பியும் கற்றுக் கொடுக்கிறார். தொடக்கத்தில், 1-1 வகுப்புகள், பொது மையங்களில் யோகா பயிற்சிகள் நடத்தி வந்த வேளையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக யோகா மைண்ட் மையம் அதிகாரப்பூர்வ தொடக்க விழாக் கண்டு இன்று புக்கிட் ஜம்புல், கிரிஸ்டல் ஸ்குவர் எனும் இடத்தில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, இந்த மையத்தில் 4 முதல் 68 வயதுடைய சிறு பிள்ளைகள் முதல் பெரியோர் வரை யோகாசனம் கற்றுக் கொள்கிறார்கள், என முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இராஜலட்சுமி இவ்வாறு கூறினார்.

இராஜலட்சுமி வழிகாட்டலில் மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை கல்வி மற்றும் சுகாதார பட்டறைகளும் ஏற்று நடத்தப்படுகிறது.

“யோகாசனம் வயது வரப்பின்றி குடும்பத்தாருடன் கற்றுக் கொள்ளும் சிறந்த பயிற்சியாகும்.

“ஒருவர் யோகாசனம் கற்றுக் கொள்ளும் போது உள்நாட்டில் மட்டுமின்றி அனைத்துலக ரீதியில் நடத்தப்படும் போட்டிகளிலும் கலந்து கொண்டு அங்கீகரிக்கப்படுவார்கள்,” என்றார்.

அவ்வகையில் இராஜலட்சுமி மற்றும் அவர்தம் குழுவினர் இதுவரை பல விருதுகள், சாதனைகள் படைத்துள்ளார் என்பது சாலச் சிறந்தது.

யோகா பாரதி விருது; யோகா ஜோதி விருது(2022); திரக்ஸ் அனைத்துலக கார்னிவல் யோகா போட்டியில் (35-46 வயது) பிரிவில் முதல் நிலை வெற்றியாளர்(2021); பச்சிமோத்தானாசனம்’
எனும் யோகாசனத்தை
26 நிமிடங்கள் 3 வினாடிகள் செய்து மலேசிய சாதனை புத்தகத்தில் பதிவு; அனைத்துலக கனடா விருது;
Amazing Olympia World Record (AOW) சாதனை; மெஸ்பன் கலைமாமணி விருது(2022) மற்றும் பல விருதுகள் பெற்று மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்தார்.

அண்மையில், இந்தியா, புது டெல்லியில் அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அகில உலக யோகா போட்டியில் மலேசிய பங்கேற்பாளர்கள் சாதனைப் படைத்தனர்.

மேலும், யோகா மைண்ட் மையத்தை பிரதிநிதித்து சென்ற மாஸ்டர் இராஜலட்சுமியுடன் அவரது நான்கு மாணவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த அகில உலக யோகா போட்டியில் அஸ்தாங்கா யோகா மையத்தைச் சேர்ந்த 7 மாணவர்களும்
யோகா மைண்ட் மையத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் என மலேசியாவைப் பிரதிநிதித்து 11 மாணவர்கள் பங்கேற்றனர். அஸ்தாங்க யோகாவை சேர்ந்த பயிற்றுனர் யோக பாரதி அமுதா கெளரப்பன் தங்கப் பதக்கம் வென்றார்.

அதேவேளையில், மாஸ்டர் இராஜலட்சுமி (41-50வயது) பிரிவில் மூன்றாவது நிலை வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பினாங்கு மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். அவரது மையத்தில் இருந்து சென்ற மாணவர்களில் நான்கு மாணவர்களும் வெற்றிப் பெற்றனர். அதில் சுபிக்‌ஷா கோபி மற்றும் நெத்ரா நெடுங்கிளியென் 15-16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 4-வது மற்றும் 6-வது இடத்தை தட்டிச் சென்றனர்.

17-20 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவில் பாமணி மூன்றாவது இடத்தையும், சிநேகா கோபி 6-வது இடத்தையும் வென்றனர். இந்த மையத்தை சேர்ந்த மல்லிகா சுப்பிரமணியம் 50 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் 3வது இடத்தைப் பெற்று பெண்களால் எந்த வயதிலும் சாதனைப் படைக்க முடியும் என நிரூபித்துள்ளார்.

எனவே, யோகா கற்றுக் கொள்ள ஆர்வமுள்ளவர்கள் மாஸ்டர் இராஜலட்சுமி அவர்களை +60 12-560 0644 எனும் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.