ரிம 42.38 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 268 பராமரிப்புத் திட்ட விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன – ஜெக்டிப்

பந்தாய் ஜெரேஜா – மாநில அரசு பினாங்கு பராமரிப்பு நிதியம் மூலம்  இம்மாநிலத்தில் 268 பராமரிப்பு மற்றும் வீட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்த 2021, மார்ச் மாதம் வரை ரிம 42.38 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது.

வீட்டுவசதி, உள்ளாட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெக்டிப் சிங் டியோ கூறுகையில்,
அடுக்குமாடி வீட்டுப் பராமரிப்புத் திட்டங்களில்
அதிகமான விண்ணப்பங்கள் மின் தூக்கி மேம்படுத்தல் / மாற்றுதல் மற்றும் நீர் தொட்டிகளை மாற்றுவது / பழுதுப்பார்ப்பது ஆகியவை இதில் அடங்கும் என்றார்.

“450 செயல்படுத்தப்பட்ட பராமரிப்புத் திட்டங்களில்  சுமார் ரிம22,171,525.74 செலவில்  புதிய மின் தூக்கி பொருத்துதல் உள்ளடக்கிய 254 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளையில் நீர் தொட்டிகள் அல்லது குழாய் அமைப்புகளை பழுதுபார்ப்பது / மாற்றுவது போன்ற 131 பராமரிப்புப்  பணிகளுக்கும் ரிம9,701,286.80 செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“இதுபோன்ற நிதி ஒதுக்கீடு அடுக்குமாடி வீடமைப்புத் திட்டங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயனளித்துள்ளது.

“மேலும், மாநில அரசு பொது வீடமைப்புத் திட்டங்கள் மட்டுமின்றி தனியார் வீடமைப்புப் பகுதியில் வசிக்கும் பினாங்கு மக்களுக்கு உதவுவதில் மாநில அரசின் செயல்பாட்டை நிரூபிக்கிறது,” என்று பாயான் பாரு, மஹ்சூரி அடுக்குமாடி குடியிருப்பில் பினாங்கு மாநில 80% பராமரிப்பு நிதியம் குறித்து நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் ஜெக்டிப் அறிவித்தார்.

இதனிடையே, கூரையை சரிசெய்தல் / மேம்படுத்துதல் (ரிம 2,684,867.28), சாயம் பூசுதல் (ரிம6,358,025.04), சாலை அமைத்தல் (ரிம27,917.70), செங்கல் சுவர்கள் / வேலிகள் அமைத்தல் (ரிம708,679.36), விரிசல் சரிபார்த்தல் (ரிம 5,830), படிக்கட்டு கைப்பிடிகள் (ரிம271,300) மற்றும் பேரழிவுக்கான சிறப்பு நிதியம் (ரிம456,900) ஆகியவை இதில் அடங்கும்.

இங்குள்ள  மஹ்சூரி அடுக்குமாடி குடியிருப்பில் ஆறு மின் தூக்கி பழுதுபார்க்கும் பணிக்கான மொத்த செலவில்  ரிம936,695.76 அல்லது 80 சதவீத நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு ஏற்கும் என ஜெக்டிப் அறிவித்தார்.

இத்திட்டம் செயல்படுத்த மீதமுள்ள 20 விழுக்காடு நிதியை  (ரிம234,173.94)  அந்த அடுக்குமாடி நிர்வாக குழுவின் (ஜே.எம்.பி) மூலம் வழங்கப்படும், என்றார்.

“இந்த குடியிருப்புப் பகுதியில் இருக்கும்  180 வீடுகளில் சுமார் 700 பேர் வசிக்கின்றனர். இந்த குடியிருப்பு 1991 இல் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் (பி.டி.சி) மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டது.

பாயான் பாரு, மஹ்சூரி அடுக்குமாடி

“இருப்பினும், இப்போது, ​​தகுதிவாய்ந்த அனைத்து தனியார் வீடமைப்புப் பராமரிப்பு பணிகளும் மட்டுமின்றி
இதற்கு முன் பி.டி.சி மேற்பார்வையில் இருந்த அனைத்து திட்டங்களும் உட்பட இனி ஒரு நிறுவனத்தின் கீழ் மட்டுமே நிர்வகிக்கப்படும், அதாவது பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியம் (எல்.பி.என்.பி.பி) ஆகும்,” என்று டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான அவர் விவரித்தார்.