ரியோ ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்குச் சன்மானம் – முதல்வர்

வெற்றிப் பெற்ற ரியோ ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் வீராங்கனையுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்
வெற்றிப் பெற்ற ரியோ ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் வீராங்கனையுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்

பினாங்கு மாநில அரசு ஒலிம்பிக் பூப்பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற டத்தோ லீ சோங் வேய், சான் பெங் சூன், கோ லியூ இங் ஆகிய மூவருக்கும் சன்மானம் வழங்கி கெளரவித்தது. இம்மூவரும் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்தனர் என்றால் மிகையாகாது.
ஒலிம்பிக் போட்டியில் பினாங்கு மாநிலத்தை பிரதிநித்த டத்தோ லீ சோங் வேய் மற்றும் சான் பெங் சூன் இருவரின் வெற்றி மகுடம் பினாங்கு மாநிலத்திற்குப் பெருமிதம் சேர்ப்பதாகத் தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் பினாங்கு மாநிலத்திற்கும் நாட்டிற்கும் வெள்ளி பதக்கம் பெற்றுக் கொடுத்த மலேசிய வீரர் டத்தோ லீ சோங் வேய் பங்கு அளப்பறியது என்றார்.
பினாங்கு மாநிலத்தைச் சார்ந்த வீரர் சான் பெங் சூன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று பூப்பந்து துறைக்கு புதிய நம்பிக்கை வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு உலக ஜூனியர் பூப்பந்து போட்டியில் பினாங்கு மாநிலத்தைச் சார்ந்த 15 வயது நிரம்பிய கோ ஜின் வேய் வெற்றி வாகைச் சூடினார். எனவே, இம்மாநிலத்தின் வெற்றி வீரர்களின் பங்களிப்பை முன்னுதாரணமாகக் கொண்டு இளம் தலைமுறையினர் விளையாட்டுத் துறையில் வெற்றி நடைப்போட வேண்டும்.
மாநில அரசு ஒலிம்பிக் வெற்றி வீரர்கள் மற்றும் வீராங்கனைக்கு சன்மானம் வழங்கும் பொருட்டு பூப்பந்து போட்டியின் ஒற்றையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற டத்தோ லீ சோங் வேய்க்கு ரிம150,000 இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் எடுத்த சான் பெங் சூனுக்கு ரிம100,000 அதேவேளையில் மலாக்கா மாநிலத்தை சார்ந்த கோ லியூ இங் அவர்களுக்கு ரிம25,000 மாதிரி காசோலையை மாநில முதல்வர் எடுத்து வழங்கினார். மேலும் பூப்பந்து வீரர் மற்றும் வீராங்கனைக்கு ‘பினாங்கு தவர் கிளாப்’ உறுப்பினராகும் சலுகையும் வழங்கப்பட்டன.
மாநில முதல்வர் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை பினாங்கு மக்கள் காண்பதற்கு கேர்னி பரகோன் மோலில் நேரடி ஒளிப்பரப்புச் செய்த ‘அன்சா’ சொத்துடைமை நிறுவனத்திற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
பினாங்கு மாநில மக்களின் நல் ஆதரவுக்கும் மாநில அரசாங்கத்தின் சன்மானத்திற்கும் தலை வணங்கினார் டத்தோ லிம் சோங் வேய். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலக தர பூப்பந்து போட்டியில் பங்குக் கொண்டு, எனது விளையாட்டுப் பங்களிப்பு மற்றும் உடல் நலனைப் பொருத்தே 2020-ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதைப் பற்றி முடிவெடுப்பேன் எனச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். பினாங்கு இளைய தலைமுறையினர் பூப்பந்து மட்டுமின்றி பிற விளையாட்டுகளிலும் சிறந்து விளங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.