ஜார்ச்டவுன் – கல்வித் துறையில் ஆசிரியர்களின் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், 2025ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு மாவட்ட சிறந்த சேவை பாராட்டு விழா சிறப்புடன் நடைபெற்றது.

இந்த விழாவில் நிதித் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்வி வளர்ச்சியில் அர்ப்பணித்து பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
“நாட்டின் கல்வி அமைப்பை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. இலக்கவியல் மற்றும் உள்ளடக்கிய கல்வி முறை மாற்றங்களுக்கு ஏற்ப, அவர்கள் தொடர்ந்தும் தங்களை புதுப்பித்து மாணவர்களுக்கு சிறந்த கற்றல் கற்பித்தலை வழிநடத்தி வருவது பாராட்டக்குரியது,” எனக் குறிப்பிட்டார்.

“தேசிய கல்வி அமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில், இலக்கவியல் மற்றும் உள்ளடக்கிய கல்வி நோக்கில் உருமாற்றம் செயல்படுத்துவது அவசியமாகும். மடானி அரசு கல்வியை தேசிய முன்னேற்றத்தின் முக்கிய தூணாகக் கருதுகிறது. இந்த மாற்றத்திற்கு கல்வியாளர்கள் வழங்கும் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு நாட்டின் எதிர்காலத்திற்கே வழிகாட்டும்,” என பாராட்டினார்.
இந்த விழாவில், பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் வோங் யூயி ஹார்ங், பினாங்கு மாநில கல்வித் துறையின் திட்டமிடல் மற்றும் மேலாண்மைத் துறையின் கல்வித் துணை இயக்குநர் துவான் ஹாஜி முகமது டிஜியாவுதீன் பின் மாட் சாத்; துணை மாவட்ட கல்வி அதிகாரி டாக்டர் முகமது சிரோஜ் பின் அப்துல் லத்தீஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழா, ஆசிரியர்களின் உழைப்பு மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் ஒரு தளமாக அமைகிறது. மேலும், சிறந்த சேவை வழங்கும் கல்வியாளர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.
தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம், வடகிழக்கு மாவட்ட கல்வி அலுவலக கூட்ட அறை மேம்பாட்டிற்காக 2025 ஆம் ஆண்டில் ரிம242,000 நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார்.
இந்நிதி, மின் அமைப்பை மேம்படுத்துதல், கூரையைப் பழுது பார்த்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவை கவுண்டரை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல மேம்பாட்டுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவித்தார். அதோடு, தலைமையாசிரியர்களுடனான சந்திப்புக் கூட்டங்கள் ஏற்று நடத்த 106 நபர்கள் உள்ளடக்கிய சந்திப்புக் கூட்ட அறையும் மேம்படுத்தப்படும்.
கடந்த ஆண்டு (2023) வடகிழக்கு கல்வி மாவட்ட அலுவலக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரிம200,000 நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
மேலும், ஆசிரியர்களின் சேவை மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் பாராட்டு விழாவுக்கான நிதி ஆதரவாக, நிதி அமைச்சின் மூலம் ரிம18,000 ஒதுக்கீடு வழங்கியதாகக் கூறினார்.
இந்த விழாவில், 413 ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான பாராட்டும், 26 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதளிப்பும் வழங்கப்பட்டது.