விளையாட்டுச் சங்கங்களின் தரத்தை மேம்படுத்த ரிம20,000 வரையிலான நிதி ஒதுக்கீடு அறிவிப்பு – சூன் லிப் சீ

Admin

 

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில  அரசு விளையாட்டுச் சங்கங்களின் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தின் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு  மேலாண்மை மற்றும் நிர்வாக உதவித் திட்டத்தை (எஸ்.பி.பி.பி) அறிமுகப்படுத்தியது என்று இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர், சூன் லிப் சீ கூறினார்.

இத்திட்டத்தின் மூலம், பினாங்கு மாநில விளையாட்டு மன்றம் (எம்.எஸ்.என்) ஒவ்வொரு விளையாட்டுச் சங்கங்களுக்கும் 10 கூறுகள் அடிப்படையில்  மதிப்பீடு செய்து அதன் மதிப்பெண்களுக்கு ஏற்ப ஏ, பி, சி மற்றும் டி என வகைப்படுத்தும்.

” ஏ வகை  விளையாட்டுச் சங்கங்களுக்கு தலா ரிம20,000 நிதி ஒதுக்கீடும்,
அதேவேளையில், பி வகை சங்கங்களுக்கு ரிம10,000 நிதி வழங்கப்படும்.

“இதற்கிடையில், சி வகை  சங்கங்களுக்கு ரிம5,000 நிதி ஒதுக்கீடு வழங்கப்படும். இருப்பினும் டி  வகை சங்கங்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படாது.

“எம்.எஸ்.என் கீழ் இயங்கும் 48 சங்கங்களின் செயல்பாட்டுத் தரம், செயல்திறன் மற்றும் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்த இந்த ஒதுக்கீடு  துணைபுரியும்,” என பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினருமான சூன் லிப் சீ நம்பிக்கை தெரிவித்தார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு விளையாட்டு மன்றத்தின் இயக்குனர் ஹாரி சாய் ஹெங் ஹுவா மற்றும் மாநில விளையாட்டு கவுன்சில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, விளையாட்டுச் சங்கங்களுக்கு விளையாட்டு வீரர்களின் சாதனை & அடைவு நிலை மற்றும் மலேசிய விளையாட்டுப் போட்டி (சுக்மா) பங்கேற்பின் அடிப்படையில் விளையாட்டு மேம்பாட்டுக்கான நிதி உதவி வழங்கப்பட்டன என்று லிப் சீ விளக்கினார்.

எஸ்.பி.பி.பி திட்டத்தின் கீழ்
அனைத்து 48 சங்கங்களும் ஏ வகைக்கு உட்படுத்தப்பட்டால் எம்.எஸ்.என் அதிகபட்சமாக ரிம960,000 நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹெங் ஹுவா, சங்கங்களின் மதிப்பீடு கணக்கெடுப்பு அடிப்படை தகவல்கள்; எம்.எஸ்.என் திட்டங்களில்  பங்களிப்பு;  மேலாண்மை சந்திப்புக் கூட்டங்கள்; விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சங்கங்கள் இடையிலான விளையாட்டு போட்டி ஆகியவை அடங்கும்.

மேலும், மதிப்பெண் செயல்முறைக்கு பயிற்சித் திட்டம், தொழில்நுட்ப அலுவலர் திட்டம், சங்க தடகள தரவு, சங்க பயிற்சியாளர் தரவு மற்றும் சங்க தொழில்நுட்ப அலுவலர் தரவு ஆகியவை பின்னர் கணக்கெடுக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

மதிப்பீடு மற்றும் மதிப்பெண் செயல்முறை 2020 டிசம்பர் முதல்  2021,நவம்பர்  வரை இடம்பெறும், மேலும் அடுத்த ஆண்டு டிசம்பரில் எஸ்.பி.பி.பி திட்டத்திற்கான  நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்.

இத்திட்டம் வெற்றிப்பெற்றால் வருங்காலங்களில் கூடுதல் நிதி ஒதுக்கீடு  மாநில அரசிடம் இருந்து பெற முடியும் என ஹுவா நம்பிக்கை தெரிவித்தார்.