பத்து காவான் – nவிவாக்ஸ்-மெட்ரோடெக்கின் உற்பத்தி ஆலை வசதி பத்து காவானில் திறக்கப்பட்டதன் மூலம், பினாங்கில் 175 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த உற்பத்தி ஆலை வசதி திறப்பு விழாவின் போது இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ பினாங்கிற்கு அதிகமான தொழில்துறை பங்குதாரர்களை ஈர்ப்பதில் மாநில அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
“மலேசியாவில், குறிப்பாக பினாங்கில் விரிவாக்கம் செய்வதற்கான இந்நிறுவனத்தின் முடிவு, ஒரு விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகு எடுக்கப்பட்டது.
“இது ஒரு முதலீட்டு இலக்கு, திறன் மிக்க தொழிலாளர்கள், புத்தாக்கத்தில் கூடுதல் கவனம் மற்றும் ஒரு மூலோபாய புவியியல் இருப்பிடம் என இம்மாநிலத்தின் சிறப்புகளை பிரதிபலிக்கிறது.
“பினாங்கு முன்னதாகவே உலகம் முழுவதிலுமிருந்து முதலீட்டாளர்களின் வருகையை பெற்றுள்ளது. மேலும் பல முதலீட்டாளர்களை வரவேற்று அவர்களுக்குத் தேவையானதை வழங்க இணக்கம் கொள்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
விவாக்ஸ்-மெட்ரோடெக் என்பது புதைக்கப்பட்ட பயன்பாட்டு இருப்பிடத்தைக் கண்டறிதல், ஃபைபர்-ஆப்டிக் கேபிள் இருப்பிடத்தைக் கண்டறிதல், இரும்பு உலோகங்கள் கண்டறிதல் மற்றும் பூச்சு பகுப்பாய்வு ஆகியவற்றிற்கான உபகரணங்களை தயாரிக்கும் ஓர் அனைத்துலக உற்பத்தியாளர் ஆகும்.
மேலும், பினாங்கில் அதன் தயாரிப்புகள் கத்தோடிக் முறையில் பாதுகாக்கப்படும் குழாய்களில் ACVG ஆய்வுகள், கேபிள் உறையிலிருந்து தரைக்கு இடையிலான பிரச்சனைகளைக் கண்டறிதல், குழாய்கள் மற்றும் குழாய்களின் உட்புறத்தை ஆய்வு செய்தல் மற்றும் புதைக்கப்பட்ட பயன்பாடுகளை மேப்பிங் செய்தல் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பினாங்கில் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி முதலீட்டில் மொத்தம் ரிம6.7 பில்லியனைப் பதிவு செய்துள்ளதாகவும் ஜக்தீப் பகிர்ந்து கொண்டார். இது 36 அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களிலிருந்து பெறப்பட்டது. அதோடு, 4,577 புதிய வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவாக்ஸ்-மெட்ரோடெக் கார்ப்பரேஷனின் தலைவர் மார்க் ட்ரூ, மாநில அரசு, அமைச்சரவை மற்றும் அனைத்து மாநில பங்குதாரர்களின் ஆதரவு மற்றும் நல்லெண்ணத்திற்காக தனது நன்றியைத் தெரிவித்தார்.
பினாங்கில் விவாக்ஸ் தொழிற்சாலை வசதி மேம்படுத்துவதன் மூலம், ஆய்வு உபகரண உற்பத்தித் துறையில் மாநிலம் தனது நிலையை வலுப்படுத்தும் என்றும் ட்ரூ நம்பிக்கை தெரிவித்தார்.