பத்து காவான் – உள்ளூர் கழிவு மேலாண்மை நிறுவனமான ஷான் பூர்ணம் மெட்டல்ஸ் சென் பெர்ஹாட், மாநில அரசின் பசுமை முன்முயற்சி திட்டமான ‘ஸ்மார்ட் மறுப்பயன்பாட்டுத் திட்டத்திற்கு’ ஆதரவளித்து, 90 பழைய மடிக்கணினிகளை பழுதுபார்த்து மறுபயன்பாட்டுக்காக வழங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ்,
இந்நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ் 90 மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கியதற்குப் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், மின்னணு கழிவுகளைக் கல்வி மூலதனமாக மாற்றும் முயற்சி வரவேற்கத்தக்கது, என்றார்.

“நான் கடந்த ஆண்டு உங்கள் தொழிற்சாலைக்குப் பயணம் மேற்கொண்ட போது, பழையதும் பயன்பாடின்றி இருந்த சாதனங்களை நீங்கள் மீட்டெடுத்து, அதனைப் பயனுள்ளதாக மாற்றும் செயல்முறையைக் கண்டு வியந்தேன்.
ஸ்மார்ட் மறுபயன்பாடு திட்டம் வாயிலாக, நாம் சாதனங்களை வீணடிக்காமல், மீண்டும் பயன்படுத்த முடிகிறது,” என இன்று பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியின் போது அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் மற்றும் மின்சாதன கழிவுகள் மறுசுழற்சி உள்ளிட்ட கழிவு மேலாண்மை துறையில் 30 வருட அனுபவமுள்ள புகழ்பெற்ற நிறுவனமாக ஷான் பூர்ணம் அறியப்படும் என சாவ் கொன் இயோவ் தெரிவித்துள்ளார்.
“இந்நிறுவனம் தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புகளை தொடர்ந்து சிறப்புடன் செயல்படுத்தி, இதன் மூலம் பெறுநர்கள் குறிப்பாக மாணவர்கள் பயனடைகின்றனர்,” என அவர் தெரிவித்தார்.
“பத்து காவான் நாடாளுமன்றத்திற்கு 90 மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. இதில் பிறை சட்டமன்ற சேவை மையமும் உள்ளடங்கும்.

“சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, பேசியதை செயலில் காட்டி, பினாங்கு மாநிலத்தை மேலும் பசுமையாகவும் சிறந்ததாகவும் மாற்ற ஒத்துழைக்கும் சிறந்த பங்குதாரராக விளங்கும் ஷான் பூர்ணம் நிறுவனத்திற்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், முதல் கட்டமாக 20 மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. இது வசதிக் குறைந்த மாணவர்களுக்கு வழங்க இணக்கம் கொண்டதாக முதலமைச்சர் கூறினார். பினாங்கின் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கும் முயற்சிக்கு முக்கியப் பங்காற்றுகின்றன.
ஸ்மார்ட் மறுபயன்பாட்டுத் திட்டம் வழி மடிக்கணினிகளை மறுசுழற்சி செய்து, மாநிலத்தில் நிலைத்தன்மையை ஊக்குவித்து, டிஜிட்டல் வித்தியாசத்தை குறைக்கும் முயற்சியாக செயல்படுகிறது என அறியப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு, பத்து காவான் நாடாளுமன்ற மன்றத்தின் இயக்குநர் ஈவ் சீ வேய், ஷான் பூர்ணம் நிர்வாக இயக்குநர் டத்தோ ஸ்ரீ எஸ்.செல்வகுமார் செட்டி, ஷான் பூர்ணம் துணை நிர்வாக இயக்குநர்
தினேஷ் குமார், பினாங்கு மாநில முதலமைச்சர் அலுவலக நிர்வாக இயக்குநர் டத்தின் பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.