ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திற்குப் புதிய வாகன நிறுத்துமிடம் நிர்மாணிப்பு

Admin

பிறை – சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் நாட்டிலேயே மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்திற்கு இந்து மதத்தினர் தவிர, வெளிநாட்டில் இருந்தும், ஆசிர்வாதம் பெறுவதற்கும் பிரார்த்தனை செய்வதற்கும் பல்லின சமூகத்தினர் வருகையளிப்பர். எனவே, ஆலய நிர்வாகத்தினர் இந்த ஆலயத்திற்கானப் பிரத்தியேக வாகன நிறுத்துடம் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டது.

ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகம் வாகன நிறுத்துமிடம் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரிம700,000 நிதிச் செலவில் கட்டுமானம் மேற்கொள்ளப்படும். இந்தப் புதிய வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 450 வாகனங்கள் நிறுத்த முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த வாகன நிறுத்துமிடம் இரண்டு பிரிவுகளாக நிர்மாணிக்கப்படும். முதல் பிரிவில் 150 வாகன நிறுத்துமிடங்களும், இரண்டாம் பிரிவில் 300 இடங்களும் கட்ட இலக்கு கொண்டுள்ளது. இத்திட்டம் ஏறக்குறைய 4 அல்லது 5 மாதங்களில் நிறைவுப்பெறும்.

முன்னதாக, இந்த ஆலயத்திற்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் 20 வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடியும். எனவே, இத்திட்டமானது இந்த ஆலயத்தில் பல நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் நடத்த இலகுவாக இருக்கும் என ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் கூறினார்.

இந்த ஆலயத்தில் புதிய வாகன நிறுத்துமிடம் நிர்மாணிக்கும் கனவை நினைவாக்கப் பெரிதும் பங்களித்த இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளேன்.

“இந்த ஆலயம் இந்து மதம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமின்றி இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பல சமூகநலத் திட்டங்கள் வழிநடத்துகிறது. அண்மையில், ஆறாம் ஆண்டு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு தேர்வுப் புத்தகங்கள், பழைய தேர்வுத் தொகுப்புகள், குறிப்புகள் மற்றும் பயிற்சி தொகுப்புகளையும் வழங்கியுள்ளனர். மேலும், தமிழ்ப்பள்ளிகளில் சமய வகுப்புகளும் ஏற்று நடத்தப்படுகிறது.

“ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் முன்முயற்சியில் உயர்க்கல்வி மையங்களில் பயிலும் பி40 குழுவைச் சார்ந்த
மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது பாராட்டக்குரியது,” என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய வாகன நிறுத்துமிடம் கட்டுமான பூமி பூஜை மற்றும் சமுதாய தலைவர்களுடன் நட்புறவு கூட்டத்தில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக, இந்த ஆலய நிர்வாகம் தீபாவளித் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சுமார் 400 மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (OKU) உணவுக் கூடைகள் விநியோகம் போன்ற பல்வேறு தொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஆண்டுதோறும், ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர், வழிபாட்டு இல்லங்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGO) மற்றும் பிற மையங்களுக்கு ரிம400,000 நிதி உதவி வழங்குகிறது. இது மாநிலத்தின் பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப மாநில வளர்ச்சி, பன்முகத்தன்மை, நல்லிணக்கம் மேம்படுத்த வலியுறுத்துகிறது என முதல்வர் கூறினார்.

“மாநில அரசு பினாங்கு வளர்ச்சிக்குத் தூண்டுகோளாக விளங்கும் மனித வளம் உருவாக்குவதற்கு அடிப்படையாகத் திகழும் கல்விக்கு முன்னுரிமை அளிக்கிறது.

“அவ்வகையில், 2019 ஆண்டு முதல் மாநில அரசு தமிழ்ப்பள்ளிக்கான வருடாந்திர நிதி ஒதுக்கீட்டை ரிம1.75 மில்லியனில் இருந்து ரிம2 மில்லியனாக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில், தமிழ்ப்பள்ளிகளில் உள்ள பாலர் பள்ளிகளுக்கு, ரிம100,000 இருந்து ரிம150,000 ஆக உயர்த்தப்பட்டது; தமிழ்ப் பள்ளிகளுக்கான சிறப்பு நிதியம் (ரிம150,000) மற்றும் பஞ்சாபி பள்ளிகள் (ரிம90,000) என நிதி ஒதுக்கீடு உயர்வு கண்டுள்ளது,” என முதல்வர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி; மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.