14வது முறையாக 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு 2008-ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 14 ஆண்டுகளாக இந்திய சமூகத்தின் நலனைப் பாதுகாப்பதில் உறுதிக் கொள்கிறது.

பினாங்கு மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் இன்று மாநிலத்தில் உள்ள அனைத்து 28 தமிழ்ப் பள்ளிகளுக்கும் பொது வசதிகள் மேம்பாடு மற்றும் வசதியான கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்க தொடர்ந்து பணியாற்றும்.

“பினாங்கு மாநிலத்தில் நிபுணத்துவம் மிக்க மனித வளத்தை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதாரத் துறையை வலுப்படுத்துவதோடு, கிழக்கு மாநில சிலிகான் வெளி என்ற அதன் தனித்துவத்தை நிலை நாட்ட முடியும்.

14-வது முறையாக வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் முறையே தமிழ்ப்பள்ளிகள் (ரிம2.0 மில்லியன்); பாலர் பள்ளிகள் (ரிம150,000); பஞ்சாபி பள்ளிகள் (ரிம90,000) மற்றும் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு சிறப்பு குழுவிற்கான நிதியம் (ரிம150,000) என நிதி ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சியில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு கூறினார்.

“இந்த ஆண்டு, மாநில அரசு 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் அதன் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்து ரிம2.0 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைப் பகிர்ந்தளித்துள்ளது. ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிகளுக்கும் அதன் நிதித் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு வழங்குவதாக தமதுரையில் முதல்வர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி; தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு கண்காணிப்புக் குழுத் தலைவர் டத்தோ அன்பழகன்; செபராங் பிறை மாநகர் கழக கவுன்சிலர் டேவிட் மார்ஷல் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வரின் கூற்றுப்படி, மாநிலத்தில் தற்போதைய வேலையின்மை விகிதத்தை அவரது நிர்வாகத்தால் இன்னும் எதிர்கொள்ள முடிகிறது. கடந்த 2021, ஆகஸ்ட் மாதம் வரை, 3.5 முதல் 3.9 சதவீதம் மட்டுமே குறைந்த வேலையின்மை விகிதத்தைப் பதிவு செய்த ஆறு மாநிலங்களில் பினாங்கும் ஒன்றாகும்.

“2020, ஜனவரி முதல் 2021, மார்ச் வரை பினாங்கில் உற்பத்தித் துறையில் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளின் அடிப்படையில், அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் 15,596 வேலை வாய்ப்புகள் கட்டம் கட்டமாக உருவாக்கப்படும்.

மாநில முதல்வரின் தலைமைத்துவத்தின் கீழ் இராஜாஜி தமிழ்ப்பள்ளிக்குப் புதிய இடத்திற்காக 2.36 ஏக்கர் நில ஒதுக்கீடு வழங்கியதற்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

“இந்தப் புதிய இடத்திற்கான நில ஒதுக்கீடு அதன் நிர்வாக நடைமுறை செயல்பாடுகள் நிறைவுப்பெற்றப் பின் இராஜாஜி தமிழ்ப்பள்ளி நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்படும்,” என்று பிறை சட்டமன்ற உறுப்பினருமான ப.இராமசாமி கூறினார்.

இதற்கிடையில், டாக்டர் அன்பழகன் தனது உரையில், அண்மையக் காலமாக தமிழ்ப்பள்ளிகளில் இந்திய மாணவர்களின் பதிவு குறைந்து கொண்டு செல்கிறது. எனவே, பெற்றோர் ஆசிரியர் சங்கம், தமிழ்ப்பள்ளி நிர்வாகக் குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் இப்பிரச்சனையைக் களைய அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த இராமசாமி, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பினாங்கில் தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து கொண்டு வருவதாகக் கருத்து தெரிவித்தார்.

மாநில அரசு பினாங்கில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னுரிமை அளிப்பதால் வேலையின்மை விகிதம் மிகக் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதியில் புதிய தமிழ்ப்பள்ளி அமைப்பதற்கு மாநில அரசு தாமான் பாகானில் நில ஒதுக்கீடு வழங்கியுள்ளதாக முதல்வர் கூறினார். கூடிய விரைவில் புதியப் பள்ளி அமைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகக் கூறினார்.