2019-2025 வரை ரிம217.42 பில்லியன் முதலீட்டு உயர்வு; பினாங்கு மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது – முதலமைச்சர்

Admin
tkm1120a

ஜார்ச்டவுன் – மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (MIDA) தரவுகளின் அடிப்படையில், 2019 முதல் 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வரை பினாங்கு உற்பத்தித் துறையில் ரிம217.42 பில்லியன் மதிப்புள்ள மொத்த முதலீடுகளைப் பதிவு செய்துள்ளது.

2009 முதல் 2018 வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்தத் தொகை ரிம65.67 பில்லியன் அதிகரித்துள்ளது என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

“மூன்று மடங்குக்கும் அதிகரித்துள்ள இந்த முதலீட்டு உயர்வு, பினாங்கு மாநிலத்தின் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடாகும்,” என்று 15-வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாவது தவனையின் இரண்டாவது கூட்டத்தில் தனது தொகுப்புரையை வழங்கும் போது இவ்வாறு கூறினார்.

மேலும், 2021 ஆம் ஆண்டில் பினாங்கு மாநிலம் பெறும் அந்நிய நேரடி முதலீடு (FDI) ரிம74.44 பில்லியனாக இருந்தது என்றும், உள்நாட்டு முதலீடு (DDI) ரிம1.78 பில்லியனாக பதிவானது என்றும் முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டில் பினாங்கு மாநிலம் சாதித்த அசாதாரண செயல்திறனின் மூலம், அந்நிய நேரடி முதலீடு (FDI) ரிம60.13 பில்லியனாகவும், உள்நாட்டு முதலீடுகள் ரிம3.29 பில்லியனாகவும் இருந்தது. இது நிலையான கொள்கை வகுத்தல், திட்டமிடலில் கவனம் செலுத்துதல் மற்றும் பினாங்கு மாநிலத்தின் நிலைத்தன்மை மற்றும் திறன்களில் உலகளாவிய முதலீட்டாளர்களுக்குள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
அதே நேரத்தில், நிலையான உள்நாட்டு நேரடி முதலீட்டின் வரவு, உள்நாட்டு முதலீடு தொடர்ந்து வலுவாக நிலைத்திருப்பதைக் காட்டுகிறது. இது பினாங்கு மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டின் மீதான உள்ளூர் நிறுவனங்களின் நம்பிக்கையைத் தெளிவாக பிரதிபலிக்கிறது
“இந்தச் சூழல், மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி அந்நிய நேரடி முதலீட்டை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக உள்ளூர் நிறுவனங்களின் பலத்தாலும் அதிகாரம் பெறுகிறது என்பதை பிரதிபலிக்கிறது,” என்று பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினருமான அவர் விளக்கமளித்தார்.

2025, செப்டம்பர் நிலவரப்படி, பினாங்கு ரிம15.79 பில்லியனை எட்டிய முதலீடுகளைப் பதிவு செய்துள்ளதாக கொன் இயோவ் கூறினார்.

“உலக வரிப் பிரச்சனைகள், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி அழுத்தங்களை எதிர்கொண்டாலும், பினாங்கின் பொருளாதார மீள்தன்மையை நிரூபிக்கும் ஒரு சாதனையாக இது அமைகிறது.”

“நிலைத்தன்மை, போட்டித்தன்மை மற்றும் எதிர்கால நோக்குடன் கூடிய மதிப்புகளை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, பினாங்கு மாநிலம் ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான தேர்வாக வலுவாக நிலைப்பெற்றுள்ளது.

“நீண்ட காலத்திற்கு மாநிலத்தின் போட்டித்தன்மையை உறுதி செய்யக்கூடிய உயர்தர முதலீடுகள், ஆட்டோமேஷன், டிஜிட்டல் மயமாக்கல், ஆராய்ச்சி & மேம்பாடு மற்றும் மூலோபாய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த உந்துதல் தொடர்வதை உறுதி செய்வதற்கு மாநில அரசு உறுதிபூண்டுள்ளது.