2022 ஜார்ச்டவுன் விழா மீண்டும் மலர்கிறது

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு ஜார்ச்டவுன் விழா கலை, திரையரங்கம், இசை, ஆடல், படம், புகைப்படம் மற்றும் பாரம்பரியம் என இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலர்கிறது. இந்த விழா வருகின்ற ஜூலை மாதம் 9 முதல் 24 வரை 16 நாட்களுக்கு 80 நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தலமாக விளங்கும் ஜார்ச்டவுன் நகரில் நடைபெறுகிறது. பொது மக்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் ஜார்ச்டவுன் நகரத்தின் தனித்துவத்தை அனுபவிக்க இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

2008ஆம் ஆண்டு யுனெஸ்கோ ஜார்ச்டவுன் உலகப் பாரம்பரியச் சின்னமாக பட்டியலிடப்பட்டதிலிருந்து, பினாங்கின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பல சர்வதேசப் பாராட்டுகளைப் பெற்றுள்ளது என்று மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.

“பினாங்கு கலை வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை வழங்கும் ஒரு மாநிலமாகும். அவற்றில், இந்த மாநிலத்தின் கலையைப் பறைச்சாற்றும் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக ‘ஜார்ச்டவுன் விழா’ விளங்குகிறது. கலை மற்றும் கலாச்சார செயல்பாடுகளைத் தொடர்ந்து ஊக்குவித்து உலகளாவிய கலை மற்றும் கலாச்சார வட்டத்தில் பினாங்கு மாநிலத்தை முன்னுதாரணமாக திகழச் செய்கிறது.

“CNN Travel ஜார்ச்டவுன் விழாவை ‘நகரத்தின் சிறப்பை ஒன்றிணைக்கும் ஒரு பெரிய திருவிழா’ என்று அழைக்கிறது. அதே நேரத்தில், ‘The New York Times’ இவ்விழாவை ‘ஆசியாவின் முதன்மையான கலை நிகழ்ச்சியாக முன்னேற்றம் காண்கிறது’ என்று அழைக்கிறது,” என்றார்.

பினாங்கு சுற்றுலா மற்றும் புத்தாக்கப் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சூன் ஹிங் கூறுகையில், இந்த ஆண்டு விழாவில் நேரடியாக கலந்து கொள்ள அனுமதித்தாலும், அனைத்து நிகழ்ச்சிகளும் சிறிய அளவில் நடத்தப்படுகிறது. மாறாக, பெரிய அளவிலான வெளிப்புற நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை என நினைவுறுத்தினார்.

இவ்விழாவில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் இம்மாநிலத்தின் தனித்துவத்தை உணர முடியும். மேலும், ஜார்ச்டவுன் விழாவில் பங்கேற்க குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்து வர அனைவரையும் வரவேற்கிறோம், என்றார்.

இவ்விழாவில் பிரத்யேகமாக திட்டமிடப்பட்ட நுழைவுக் கட்டணத் திட்டங்களுக்கான டிக்கெட்டுகள் இப்போது வாங்குவதற்குத் திறக்கப்பட்டுள்ளன. மேலும் சில நிகழ்ச்சிகள் பினாங்கில் திரையிடப்படும். மேலும் டிக்கெட் பெற்ற நிகழ்ச்சிகளுக்கு சுமார் 30 முதல் 50% வரை மலிவானதாக இருக்கும். இதனால் பார்வையாளர்கள் பிரத்யேக கலையை மிகவும் மலிவான விலையில் அனுபவிக்க முடியும்.

ஜார்ச்டவுன் விழா பட்டியலில் ‘The Senses’, ‘Mozard at the Mansion’ மற்றும் பல நிகழ்ச்சிகளுக்கு நுழைவுக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

நுழைவுக் கட்டணம் விதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, பொதுமக்கள் ரசிக்கவும், பினாங்கின் பல்வேறு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் 70 விழுக்காடு இலவச நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

இந்த விழா பற்றிய கூடுதல் விபரங்களுக்கு, ஜார்ச்டவுன் விழாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான georgetownfestival.com அல்லது முகநூலில் Georgetown Festival-ஐ பார்வையிடவும்.