ஜார்ச்டவுன் – தைவான், தைபே நகரில் வருகின்ற நவம்பர்,25 முதல் டிசம்பர்,1 2025 வரை நடைபெறவுள்ள உலக ரோபோ விளையாட்டுப் போட்டியில் (WRG), சிஸ்கோர் அகாடமியின் வழிகாட்டுதலின் கீழ் மொத்தம் 24 மாணவர்கள் மலேசியாவைப் பிரதிநிதித்து பங்கேற்பர்.
மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் சிறப்புக் குழுவின் தலைவருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த அனைத்துலக ரோபோட்டிக்ஸ் மற்றும் STEM போட்டியில் தைவான், ஜப்பான், தென் கொரியா, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் படைப்பாற்றல், பொறியியல் சிறப்பம்சம் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை வெளிப்படுத்துவதற்கான உலகின் மிகப்பெரிய தளங்களில் ஒன்றாக WRG அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், நான்யாங் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற 2024 உலக ரோபோ விளையாட்டுப் போட்டியில் மலேசியா சிறந்த அறிமுகத்தைப் பெற்று, பல அனைத்துலக பாராட்டுகளையும் பெற்றது.
மலேசிய அணி ‘சுமோ ரோபோ’ பிரிவில் வெற்றி வாகைச் சூடி, நிரலாக்கப் பிரிவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தது, மேலும் புத்தாக்கத் திட்டப் பிரிவில் சிறந்த 10 புத்தாக்கத் திட்டங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது.
இந்த ஆண்டு மலேசியக் குழுவில் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தீவிர தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கப் பயிற்சி பெற்று வரும் முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பங்கேற்பர்.
சிஸ்கோர் அகாடமியின் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களின் வழிகாட்டுதலின் கீழ், மாணவர்கள் ரோபாட்டிக்ஸ் பொறியியல் மற்றும் நிரலாக்க அறிவை மட்டுமல்லாமல், தகவல் தொடர்பு, குழுப்பணி, படைப்பாற்றல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களையும் பெற்றுள்ளனர். இது உலகளாவிய தரநிலைகளை பூர்த்தி செய்ய அவர்களைத் தயார்படுத்துகிறது.
இந்த முன்முயற்சி திட்டத்திற்கு பெற்றோர் மற்றும் பினாங்கு அரசாங்கத்திடமிருந்தும் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளது, குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழு மூலம், STEM கல்வியை தொடர்ந்து ஊக்குவித்து, B40 மாணவர்கள் நவீன தொழில்நுட்பக் கற்றலை அணுகுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
“2025 WRG இல் மலேசியாவின் பங்கேற்பு போட்டிக்கு அப்பாற்பட்டது என்றும், புத்தாக்கம் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட இளம் மலேசியர்களின் தலைமுறையை வளர்ப்பதற்கான ஒரு குறிக்கோளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது,” என்றும் சிஸ்கோர் நிர்வாக இயக்குநரும் சிஸ்கோர் அகாடமியின் நிறுவனருமான காளிதாசன் கனேசா கூறினார்.
2026 ஆம் ஆண்டு WRG போட்டியை ஏற்று நடத்த மலேசியா முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அதற்கான இடமாக பினாங்கு பரிசீலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். கல்வி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான பிராந்திய மையமாக இம்மாநிலத்தை மேலும் நிலைநிறுத்தும் ஒரு நடவடிக்கையாக இது அமைகிறது, என்றார்.
இதற்கிடையில் சுந்தராஜூ, மாணவர்களின் பங்கேற்புக்கு நல்வாழ்த்து தெரிவித்ததோடு, உலக அரங்கில் தங்களின் சிறந்த படைப்பாற்றலை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தினார்.
“வெற்றி வாகைச் சூடி பினாங்குக்குத் திரும்புங்கள்,” என்று அவர் மாணவர்களை ஊக்குவித்தார்.