2026 TASKAL திட்டம், மாநில பள்ளிகளில் நிலைத்தன்மை நடவடிக்கைகள் வலுப்படுத்தும்

Admin
img 20260407 wa0127

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு, பள்ளி அளவிலான நிலைத்தன்மை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கத்தில், 2026 இல் நிலைத்தன்மை நோக்கிய பள்ளி உருமாற்றத் திட்டம் (TASKAL) செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

மூன்று முதல் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெறும் பள்ளிகளுக்கு, நிலைத்தன்மை நடவடிக்கைகளை செயல்படுத்த தொடக்க மானியம் வழங்கப்படும் உள்ளிட்ட பல முன்முயற்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.
img 20260407 wa0076
அவரின் கூற்றுப்படி, பினாங்கில் உள்ள அனைத்து 100 சதவீதப் பள்ளிகளும்
கடந்த ஆண்டு 2025 ‘TASKAL’ திட்டத்தில் பங்கேற்றது, மிகவும் பெருமைக்குரியது. இது மாநிலத்தின் கல்வி ஒருங்கிணைப்பின் வலிமையை பிரதிபலிக்கிறது,” என்றார்

“இதன்வழி, எதிர்காலத் தலைமுறையினருக்கு கல்வி கற்பிப்பதில் அனைத்து பள்ளிகளும் ஒரே தொலைநோக்குப் பார்வையை பகிரும்போது மட்டுமே பினாங்கின் உண்மையான பலம் வெளிப்படுகிறது,” என்று பினாங்கு மாநிலக் கல்வி அலுவலக அரங்கத்தில் நடைபெற்ற
2026 TASKAL திட்டம் மற்றும் 2026 TASKAL முன்னோடி திட்டம் தொடக்க விழாவில் உரையாற்றியபோது அவர் தெரிவித்தார்.

img 20260407 wa0054

இந்நிகழ்ச்சியில், பினாங்கு மாநகர் கழக மேயர் (எம்.பி.பி.பி), டத்தோ இராஜேந்திரன்;
செபராங் பிறை மாநகர் கழகத்தின் மேயர் (எம்.பி.எஸ்.பி), டத்தோ படேருல் அமின் அப்துல் ஹமீத்;
பினாங்கு மாநிலக் கல்வி இயக்குநர், முகமது ஜியாவுதீன் மாட் சாத்;
பினாங்கு பசுமை கழகத்தின் (PGC) துணை பொது மேலாளர், ஹூ ஹுவே சிங் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

TASKAL முன்னெடுப்பு, பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வையின் ஒரு வெளிப்பாடாகும் என்று கொன் இயோவ் வலியுறுத்தினார்.

மாநிலத்தில் உள்ள 396 அரசுப் பள்ளிகளின் பங்களிப்புடன், 2030ஆம் ஆண்டிற்குள் 70 சதவீத மறுசுழற்சி விகிதத்தை அடையும் இலக்கு நிச்சயமாக அடையக்கூடியதாகும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், பள்ளிகளுக்கிடையே அறிவும் அனுபவமும் பகிரப்படும் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படும் TASKAL முன்னோடித் திட்டத்தின் மூலம், வழிகாட்டி–வழிகாட்டப்படும் மாணவர் அணுகுமுறைக்கு மாநில அரசு ஆதரவு வழங்கி வருவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே, கழிவுகளைப் பிரித்தல் போன்ற நடைமுறைகள் சீராகவும் திறம்படவும் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, உள்கண்காணிப்பை வலுப்படுத்துமாறு தலைமையாசிரியர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

“மாநிலத்தின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு இணங்க, ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டைக் குறைத்தல், ஆற்றல் மற்றும் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல், மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த கல்வியை விரிவுபடுத்துதல் போன்ற முன்னெடுப்புகளைப் பள்ளிகள் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றன,” என்றார்.

“இந்த முயற்சி ஒரு கலாச்சாரமாக மாற வேண்டும். மாநிலத்தின் எதிர்காலத்திற்கான நீண்டகால முதலீடாக, கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான தலைமுறையை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும்,” என்றார்.

முன்னதாக, TASKAL முன்னோடி 2026 திட்டத்தின் கீழ் தொடக்கப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள் மற்றும் சீன, தமிழ் தேசிய வகைப் பள்ளிகள் உள்ளிட்ட 30 பள்ளிகள் TASKAL
முன்னோடிப் பள்ளிகளாக நியமிக்கப்பட்டன. இப்பள்ளிகளுக்கு முதலமைச்சர் நியமனச் சான்றிதழ்களை வழங்கினார்.