28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் மடிக்கணினிகள்

Admin

பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம், தமிழ்ப்பள்ளிகளின் கல்வி வளர்ச்சிக்காகப் பல திட்டங்கள் வகுத்து வருவது நாம் அறிந்ததே. அவ்வகையில் மாநில அரசு அண்மையில் பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் மடிக்கணினிகள் வழங்கியது. இந்நிகழ்ச்சி கடந்த மார்ச் 9ஆம் திகதி கொம்தாரில் நடைபெற்றது.

இன்றைய தொழில்நுட்ப உலகில் மனிதனையும் கணினியையும் பிரிக்க இயலாது. உலகத்தைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் கணினியின் பயன்பாட்டை நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கற்றறிந்து அதில் புலமை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் இம்மடிக் கணினிகள் வழங்கப்பட்டன. தமிழ்ப்பள்ளி ஆசிரியர் பெருந்தகைகள் இம்மடிக்கணினியை கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி வருங்காலங்களில் தமிழ்ப்பள்ளிகளின் துரித வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் இன்னும் கூடுதலான மடிக்கணினிகள் வழங்கப்படும் எனப்  பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் மதிப்பிற்குரிய ப இராமசாமி தம் சிறப்புரையில் தெரிவித்தார். மேலும், மடிக்கணினியைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியலில் தேசிய ஆரம்பப் பள்ளியும் அடங்கும். இப்பள்ளியில் பயிலும் நம் இந்திய மாணவர்களும் தமிழ் வகுப்பில் மடிக்கணினியைப் பயன்படுத்தி நன்மை பெற வேண்டும் என்பதற்காகவே வழங்கப்படுகிறது என்றார்.

இந்நிகழ்வில், பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிக்களுக்கான சிறப்புக் கண்காணிப்புக் குழு தலைவர் டத்தோ டாக் கே அன்பழகன்,  செயலவை உறுப்பினர் வழக்கறிஞர் கே மங்களேஸ்வரி, வர்த்தகப் பிரமுகர், தமிழ்நெஞ்சர் க புலவேந்திரன், பிரிமாஸ் சங்கத்தின் உதவித் தலைவர் ஜெ சுரேஸ், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள், மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நமது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையின் ஏணிப்படிகளாகத் தமிழ்ப்பள்ளிகள் அமைகின்றன. எனவே பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம் என்றும் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்குத் தூண்டுகோளாக அமையும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

 pic 1 (2)

மாண்புமிகு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர்  ப இராமசாமி அவர்கள் தம் பொற்கரத்தால் மடிக்கணினியை வழங்குகிறார். அருகில் டாக்டர் அன்பழகன் மற்றும் திருமதி மங்களேஸ்வரி.