குவாந்தான் சாலையிலுள்ள பொது சந்தை தரமேம்பாடடைந்தது

Admin

பாட்டியும் அம்மாவும் செய்து வந்த காய்கறி வியாபாரத்தைப் பரம்பரை வியாபாரமாகச் செய்து வரும் திருமதி பாக்கிய லெட்சுமி வயது 48, தம் வியாபாரத் தளமான குவாந்தான் சாலை சந்தை தரமேம்பாடு அடைந்திருப்பது மிகவும் மனமகிழ்வைத் தருவதாகத் தெரிவித்தார். 8 வயது முதல் தன் பாட்டி அம்மாவுடனிருந்து வியாபார நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு தன் இரண்டு அக்காகளுடனும் கணவருடனும் அச்சந்தையில் நான்கு தலங்களில் காய்கறி விற்று வரும் திருமதி லெட்சுமி நாற்பது ஆண்டு காலமாக அங்கு வியாபாரத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். பழமை வாய்ந்த அச்சந்தையை மேம்படுத்திய பின்னும் அசந்தையின் மாத வாடகைக் கட்டணம் முன்பு போல் ரிம 8க்கு நிலைநிறுத்தப்பட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்று திருமதி பாக்கிய லெட்சுமி, அவரின் கணவர் திரு போபி, அவரின் அக்கா திருமதி கலா ஆகியோர் தங்கள் மனமகிழ்வை வெளிபடுத்தினர். பொதுவாக வார இறுதியிலும் விழாக்காலங்களில் மட்டுமே அதிக மக்கள் வருவார்கள். இந்தத் தர மேம்பாட்டிற்குப் பிறகு அதிகமான வாடிக்ககயாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினர்.

குவாந்தான் சாலையில் உள்ள இந்தச் சந்தை 9 மாதக் காலத்தில் ரிம 433,761.52 செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இச்சந்தையைப் பினாங்கு முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். பினாங்கு மாநில அரசு பினாங்கு நகராண்மைக் கழகத்துடன் இணைந்து மக்களுக்கு இவ்வாறான வசதிகளை சந்தை வியாபாரிகளுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படுத்தித் தருவதில் மிகவும் பெருமை அடைவதாகக் கூறினார், இதுவரை, மாநில அரசு பினாங்கின் பொது சந்தைகளை மேம்படுத்த ரிம 12 மில்லியனைச் செலவளித்துள்ளது. மேலும், பினாங்கின் மிகப் பழமை வாய்ந்த சாவ்ரஸ்தா சந்தையை மேம்படுத்த மற்றுமொரு 12 மில்லியன் ஒதுக்கிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்,

ஆட்சிக் குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய சௌ கொன் யௌ உரையாற்றுகையில் மக்களின் வசதிக்காக செய்யப்படும் இத்தர மேம்பாட்டுத் திட்டம் எதிர்வரும் காலத்திலும் பினாங்கு நகராண்மைக் கழகத்தால் தொடரப்படும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நாங்கள் பினாங்கை நிர்வகிக்கும் அதிகாரத்தை இழந்தாலும் மக்களின் நலன் கருதி பினாங்கு நகராண்மைக் கழகம் அனைத்துத் பொது சந்தை தர மேம்பாட்டுத் திட்டங்களையும் நிறைவு செய்ய வேண்டும் என்றும் தம் உரையில் கேட்டுக் கொண்டார்.