55வது நிறைவு விழா: டி.ஏ.பி பொது மக்களின் ஆதரவு பெற்று கட்சியின் மாண்பினை உயர்ந்த வேண்டும்

Admin

ஜனநாயக செயல் கட்சி(டி.ஏ.பி) தொடங்கப்பட்ட நாள் முதல் இனம், மதம் பேதமின்றி இந்நாட்டு மக்களின் நம்பிக்கை பெற்று செயல்படுகிறது.

இந்த ஆண்டு தனது 55-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் டி.ஏ.பி கட்சி, பொதுவாகவே மலேசிய நாட்டை  ஜனநாயகம், ஒற்றுமை மற்றும் ஊழல் அற்ற தேசமாக உருவாக்கும் அதன் அரசியல் குறிக்கோளில் உறுதிப்பாடு கொள்கிறது. 

டி.ஏ.பி கட்சியின் மிகப்பெரிய வெற்றியாக  நம்பிக்கை கூட்டணியுடன்(பி.எச்) இணைந்து கடந்த 2018 மே,9  அன்று 14வது பொதுத் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு  மத்திய அரசாங்கத்தை கைப்பற்றியது. 

இருப்பினும், இந்த வெற்றி 22 மாதங்களுக்கு மட்டுமே நீடித்தது, ஒரு சில பி.எச் கூட்டணி தலைவர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்து பொது மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்தனர். 

பினாங்கு மாநிலத்தில், மாண்புமிகு சான் கொன் யாவ் தலைமைத்துவத்தின் கீழ் 14-வது பொதுத் தேர்தலில் இம்மாநிலத்தின் 40 சட்டமன்ற தொகுதிகளில் டி.ஏ.பி கட்சி 19 இடங்களைக் கைப்பற்றி சாதனைப் பதிவு செய்தது. 

டி.ஏ.பி கட்சியின் தேசிய துணைத் தலைவருமான சாவ் கொன் யாவ்,  1966 மார்ச்,18-ஆம் நாள் தோற்றுவிக்கப்பட்ட முதல்  பல நிலைகளில்  முன்னேற்றம் கண்டு இன்று முற்போக்கு கட்சியாக உருமாற்றம் கண்டது, என்றார். 

டி.ஏ.பி கட்சியும் பிற எதிர்க்கட்சியை போல் தொடக்கத்தில் பல சவால்களை எதிர்நோக்கி இந்நாட்டின் அரசியல் அரங்கில் நிலை பெற்றது என கூறினார் 

“நாட்டின் அரசியல் அரங்கில் மட்டுமின்றி டி.ஏ.பி கட்சி மக்கள் அவையில் 42 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்  மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது,” என முத்துச்செய்திகள் நாளிதழுக்கு அளித்த  ஒரு பிரத்யேக நேர்காணலின் போது பினாங்கு முதல்வருமான சாவ் இவ்வாறு கூறினார்.

இந்த 55 ஆண்டுகால போராட்டத்தில்  டி.ஏ.பி கட்சி மலாய் சமூகத்திற்கும் இஸ்லாமிய கொள்கைக்கும்  எதிர்மறையான  அரசியல் கட்சி என்ற குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு காண்பதே மிகப்பெரிய சவாலாக விளங்கியது

“தொடக்கத்தில் டி.ஏ.பி கட்சியின் போராட்டங்கள் சீனர், இந்தியர் அதிகமாக வாழும் நகர்ப்புறங்களில் நடைபெற்றதால்  இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

“மேலும், அந்த காலகட்டத்தில் இக்கட்சி பெரும்பாலும் சிறுபான்மை இன மக்களின் குரலின் பிரதிநிதிகளாக விளங்கியது. ஏனெனில், அப்போதைய நடப்பு அரசாங்கம் பெரும்பான்மை இனத்தவர்களால் ஆளப்பட்டது,” என்று 1986 முதல் டி.ஏ.பி கட்சியில் உறுப்பினராக திகழும் சாவ் விளக்கமளித்தார்.

ஒரு நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு, டி.ஏ.பி கட்சி தீபகற்பம்,  சபா மற்றும் சரவாக் என பல்லின மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளது.  

“இதற்கிடையில், புறக்கணிக்கப்பட்ட பொது மக்களின் உரிமைக்காக  டி.ஏ.பி தலைவர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு, உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (ஐ.எஸ்.ஏ); தேசத் துரோக சட்டம் மற்றும் பல சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் வரை, மிக  தைரியமாக தங்கள் குரலை பிரதிநிதித்துவப்படுத்த டி.ஏ.பி முன்வந்தது,” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

டி.ஏ.பி கட்சி தொடக்கத்தில் ககாசன் ராக்யாட் (ஜி.ஆர்), மக்கள் கூட்டணி மற்றும் இறுதியில் நம்பிக்கை கூட்டணி என உருமாற்றம்  கண்டு இன, மத மற்றும்  எல்லை வேறுபாடுகள் இன்றி  அதன் வெளிப்படையான தன்மையை நிரூபிக்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நம்பிக்கை துரோகம்  சம்பவத்திற்குப் பிறகு ஏற்பட்ட நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்  பொது  மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதே இப்போது டி.ஏ.பி கட்சியின் பிரதான திட்டமாக விளங்குகிறது, என்றார்.

“வருகின்ற 15-வது பொதுத் தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் மிகவும் சவாலானதாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.  ஏனென்றால், அனைத்து அரசியல் கட்சிகளும்  வாக்காளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க  போராட வேண்டும்.

“பொது மக்களுக்கு இன்னும் டி.ஏ.பி மற்றும் பி.எச் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. எனவே, இந்த போராட்டத்தில் நமது பலவீனங்களை மறு மதிப்பீடு செய்து   மேம்படுத்த வேண்டும், ” என தெரிவித்தார்.