9வது முறையாக வசதிக் குறைந்த குடும்பங்களுக்குத்  தீபாவளி அன்பளிப்பு 

ஜார்ச்டவுன் – மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை சமூக நலப்பிரிவின் ஏற்பாட்டில் ‘அன்பான சமூகத்துடன் நற்பணி’ எனும் திட்டத்தின் கீழ் தீபாவளிக் கொண்டாட்டம்  இனிதே நடைபெற்றது. 

ஒன்பதாவது  முறையாக நடத்தப்படும் இத்திட்டம் புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் வருடாந்திர திட்டமாக அமைகிறது. ஓர் ஆண்டில் இரு முறை குறிப்பாக தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தின் போது பி40 குழுவைச் சேர்ந்த குழுவினருக்குப் பரிசுக்கூடைகள் வழங்கப்படுகிறது.

“தீபத் திருநாள் கொண்டாட்டம் வருகின்ற நவம்பர்,4 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு 30 வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் பரிசுக்கூடையாக வழங்கப்பட்டன,” என புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் தலைவர் தர்மன் இவ்வாறு கூறினார். 

“கோவிட்-19 போர்களத்தில் நாம் இன்னும் வெற்றிப் பெறாத சூழலில் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஓ.பி) தவறாது பின்பற்ற வேண்டும்.

“தற்போது தேசிய மீட்சித் திட்டத்தின் கீழ் மாநில எல்லைகள் கடக்க தளர்வு வழங்கப்பட்ட போதிலும் எஸ்.ஓ.பி-ஐ பின்பற்றுவது கட்டாயம். அதுமட்டுமின்றி, தீபாவளிக் கொண்டாட்டத்தில் சுகாதார பாதுகாப்பு அம்சத்தையும் நினைவில் கொண்டு செயல்படுமாறு,” வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநில இந்து சங்கத் துணைத் தலைவர் முனிசரன்; பினாங்கு மாநகர் கழக(எம்.பி.பி.பி) கவுன்சிலர் ஹரிகிருஷ்ணன்; பினாங்கு லோட்டஸ் பேரங்காடி மேலாளர் டில்விண்டர் சிங் மற்றும் புக்கிட் பெண்டேரா பேரவை சமூகநலப் பிரிவின் துணைத் தலைவர் பாலசந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

“வருடந்தோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சி பெருந்தோற்று காரணமாக மிதமான முறையில் கொண்டாடப்படுவதன் மூலம் சேமிக்கப்பட்ட நிதியை பொது மக்களுக்கே வழங்குவது பாராட்டக்குரியது,” என புலாவ் தீக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்தோபர் லீ சூன் கிட் இந்நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக துவக்கி  வைத்து இவ்வாறு கூறினார். 

“கடந்த ஆண்டு ரிம200 மதிப்பிலான பரிசுக்கூடைகள் வழங்கப்பட்ட வேளையில் இந்த ஆண்டு ரிம300 மதிப்பிலான பரிசுக்கூடையை
வழங்குவது இதனை நன்கு சித்தரிக்கிறது,” என்றார். 

மாநில அரசு கோவிட்-19 பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்குத் தொடர்ந்து பல ஆக்கப்பூர்வமான திட்டங்கள் செயல்படுத்துகிறது என மேலும் தெரிவித்தார். 

இந்த சமூகநலத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற உதவிக்கரம் நல்கி வரும் அனைத்து ஆதரவாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டன.