Lam நிறுவனத்தின் சூரிய சக்தி அமைப்பு திட்டம் : பசுமை மாநிலமாக உருமாற்றம் காண இலக்கு

Admin

 

பத்து காவான் – செமிகண்டக்டர் தொழில்துறைக்கான ‘wafer fabrication’

உபகரணங்கள் மற்றும் சேவைகளை உலக ரீதியில் விநியோகம் செய்யும் Lam Research International Sdn Bhd நிறுவனம் தனது சூரிய சக்தி அமைப்பை இன்று பத்து காவானில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

செமிகண்டக்டர் தொழிற்துறையில் நீடித்து நிலைத்து நிற்கும் வகையில் அதன் முன்முயற்சியை மேலும் முன்னெடுப்பதற்காக சூரிய ஆற்றல் திட்டத்தை Lam நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

மாநில அரசின் நிலையான எதிர்காலத்திற்கான முன்முயற்சியில் பசுமையைப் பாதுகாக்கும் இந்நிறுவனத்திற்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

“சூரிய சக்தி அமைப்பில் Lam நிறுவனத்தின் முதலீடு பினாங்கை ஒரு பசுமை உற்பத்தி மையமாக உருமாற்றுவதற்குத் துணைபுரியும் என இந்நிறுவனத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு கூறினார்.

“இம்மாநிலத்தில் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுமை (ESG) கொள்கைகளை உயர்த்தும் இதுபோன்ற அணுகுமுறைகளை மற்ற தொழில்துறை நிறுவனங்களும் எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்,” என்று சாவ் கூறினார்.

Lam நிறுவனத்தின் நிலைத்தன்மைக்கான முயற்சிகள் அதனை சிறந்த பன்னாட்டு நிறுவனமாக நிரூபிப்பது மட்டுமல்லாமல், பினாங்கு மாநிலத்தின் சுற்றுச்சூழல் நல்வாழ்வுக்கு பங்களிப்பதில் அவர்களின் நீண்டகால அர்ப்பணிப்பையும் காட்டுகின்றன, என்றார்.

இது தவிர, இன்வெஸ்ட்பினாங்கு இல்மாநிலத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமாக இருப்பதோடு நிலைத்தன்மைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று சாவ் குறிப்பிட்டார்.

“பொது வசதிகளை வழங்குவதைத் தவிர, பினாங்கில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடையே சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுமை (ESG)-இன் முக்கியத்துவம் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த Lam நிறுவனம் போன்ற தொழில்துறை நிறுவனங்களுடன் InvestPenang இணைந்து செயல்படும்,” என்றார்.

பினாங்கு பசுமைக் கழகம் மூலம் பினாங்கு பசுமை திட்டம்2030 (PGA2030)-ஐ மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

“PGA2030 இன் கீழ், மாநிலம் அரசு பல சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.

“பினாங்கின் முதல் பேரிடர் பிரிவு நிர்வாகத்தை நிறுவுதல் மற்றும் மாநிலத்தில் ஆற்றல் திறன் திட்டங்களைப் பயன்படுத்துவதைக் கவனிக்க பினாங்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் ஆற்றல் திறன் பணிக்குழு (PREET) உருவாக்கம் போன்றவை இதில் அடங்கும்,” என்று அவர் மேலும் விவரித்தார்.

இதற்கிடையில், Lam நிறுவனத்தின் துணைத் தலைவர் (உற்பத்தி) மைக் ஸ்னெல் கூறுகையில், புதிய சூரிய சக்தி அமைப்பு முழுமையாக செயல்பட்டவுடன், ஆண்டுக்கு 3,000
MWh ஆற்றலுக்கு மேல் சேமிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

“இது ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழலில் இருந்து கிட்டத்தட்ட 2,000 டன் கரியமிலவாயு(Co2) அகற்றுவதற்குச் சமம்.

“தற்போது, ​​எங்களிடம் 4,000 பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன, மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 5,700-க்கும் மேல் உயர்த்த எண்ணம் கொண்டுள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

2030 ஆம் ஆண்டிற்குள் 100 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் 2050 ஆம் ஆண்டளவில் பூஜ்ஜிய Co2 உமிழ்வு என்ற ESG இலக்கை அடைய Lam நிறுவனம் இலக்கு வைத்துள்ளது என்றும் ஸ்னெல் கூறினார்.

Lam நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் பொது மேலாளருமான சூன் குயெக் கூறுகையில், தண்ணீர் மற்றும் ஆற்றல் பயன்பாட்டைக் குறைப்பதற்கான இந்நிறுவனத்தின் பல்வேறு முயற்சியினால் ஆகஸ்ட் 2021 முதல் நீர் பயன்பாடு 3,000 கன மீட்டர் குறைக்க முடிந்தது, என்றார்.

 

“மிகவும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பினாங்கு பசுமைக் கழகம் மற்றும் மலேசிய சுற்றுச்சூழல் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று குயெக் கூறினார்.