.
ஜார்ச்டவுன் – மலேசிய பினாங்கு இந்தியர் வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கத்தின்(MICCI)
கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி அன்பளிப்புக் கூடைகள் வழங்கும் நிகழ்ச்சியில் 200 குடும்பங்களுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், தீபாவளியை முன்னிட்டு வசதிக்குறைந்த குடும்பங்களுடன் பண்டிகை மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள முன்வந்த MICCI மற்றும் அதன் ஆதரவாளர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
MICCI கடந்த 102 ஆண்டுகளாக பினாங்கு இந்திய வர்த்தகச் சமூகத்திற்குச் சேவையாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்திய வர்த்தகச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அதன் பங்களிப்பு பாராட்டுக்குரியது, என்றார்.
மேலும், பினாங்கின் லிட்டில் இந்தியா பகுதியில் ஆண்டுதோறும் புதிய வர்த்தக நிறுவனங்களின் வருகையால் வளர்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இளம் தொழில்முனைவோர் தங்களது சொந்தத் தொழில்களைத் தொடங்க MICCI வழிகாட்டியாகவும் ஆதரவாகவும் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதேவேளையில், MICCI போன்ற வர்த்தக அமைப்புகள் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுப்பதுடன், உள்ளாட்சி, மாநில மற்றும் மத்திய அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு, கொள்கை மேம்பாட்டிற்கான ஆலோசனைகளையும் வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு பினாங்கு மாநில அரசு, MICCI முன்னெடுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக ரிம100,000 நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநில அரசிற்கு மக்களின் நலனே முக்கிய முன்னுரிமையாக இருந்து வருவதாகக் கூறிய முதலமைச்சர், 2009ஆம் ஆண்டு 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான பாராட்டுத் திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதை நினைவுகூர்ந்தார்.
தற்போது, இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய மூத்த குடிமக்களுக்கு ஆண்டுதோறும் ரிம200 உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை பதிவு செய்யாத தகுதியானவர்கள் மாநில அரசின் சேவை மையங்கள் வாயிலாகப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், i-Sejahtera உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள் வாயிலாக மாநில அரசு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரிம100 மில்லியன் நிதியை மக்களின் நலனுக்காகவும் பல்வேறு துறைகளுக்கான மானியங்களுக்காகவும் செலவிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து, மாநில அரசுடன் இணைந்து சமூக நலத் திட்டங்களை முன்னெடுப்பதில் MICCI தொடர்ந்து பங்காற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதே நிகழ்ச்சியில் பேசிய வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு பேசுகையில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என வலியுறுத்தினார். அனைத்து இந்தியர்களுக்கும் தமது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பினாங்கு மாநகர் கழக மேயர் Ir.டத்தோ இராஜேந்திரன், மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பின் தலைவர் டத்தோ பார்த்திபன் மற்றும் அதன் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.