SPRWTS பிரச்சனை தொடர்பாக பேராக் மற்றும் மத்திய அரசுடன் விவாதிக்க பினாங்கு தயார்

Admin

 

ஜார்ச்டவுன் – சுங்கை பேராக் மூல நீர் பரிமாற்றத் திட்டம் (SPRWTS) பிரச்சனை தொடர்பாக பினாங்கு, பேராக் மற்றும் மத்திய அரசாங்கத்துடனான ஒரு சந்திப்புக் கூட்டம் நடத்துமாறுக் கேட்டுக்கொள்கிறது.

மாநிலப் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு ஆட்சிக்குழுத் தலைவர் ஜைரில் கீர் ஜொஹாரி இன்று மாநில சட்டமன்றக் கூட்டத்தில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், வளர்ச்சி அடைந்து வரும் பினாங்கு மாநில முன்னேற்றத்திற்கு சுங்கை பேராக் மூல நீர் பரிமாற்றத் திட்டத்தின் அவசியம் குறித்து கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பல முயற்சிகள் மற்றும் தோல்விகள் காரணமாக, மூன்று தரப்பினர் இடையே ஒரு சந்திப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு முதல்வர், சம்மந்தப்பட்ட அமைச்சுக்குக் கடிதம் எழுதியுள்ளார்,” என்று ஹெங் லீ லீயின் கேள்விக்கு ஜைரில் இவ்வாறு பதிலளித்தார்.

SPRWTS பிரச்சனைத் தீர்க்கப்படாத நிலையில், பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) மூல நீர் தற்செயல் திட்டம் (RWCP) 2030ஐ செயல்படுத்துவதாகக் கூறினார்.

2030 ஆம் ஆண்டு வரை இம்மாநிலத்தின் மூலநீர் அபாயங்களைக் குறைக்க மாற்று வழியாக இது அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த தற்செயல் திட்டத்தில் சுங்கை டுவா நீர் சுத்திகரிப்புத் திட்ட(WTP) தொட்டியின் மேம்படுத்தலும் அடங்கும், இதன் வாயிலாக 91 MLD (மில்லியன் லிட்டர்/நாள்) நீர் சேகரிக்கப்படும்.

மேலும், புதிய நீர் சுத்திகரிப்புத் திட்டம் தற்போது 15 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இது 114 MLD நீர் சேகரிக்கும் திறன் கொண்டது.

மேலும், 114 MLD நீர் சேகரிக்கும் திறன் கொண்ட மெங்குவாங் அணையின் WTP திட்டத்தின் முதல் கட்டம் 2025 இல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 114 MLD திறன் கொண்ட சுங்கை டுவா WTP திட்டத்தின் முதல் கட்டம் 2028 இல் நிறைவடையும்.

புதிய சுங்கை பிறை நீர் விநியோக திட்டமானது முன் சுத்திகரிப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படும்.
இது 136 MLD நீர் திறன் கொண்டுள்ளதோடு வருகின்ற 2028-இல் நிறைவுப்பெறும்.

மற்றொரு விஷயத்தில், மத்திய அரசால் வாக்குறுதியளிக்கப்பட்ட, இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படாத உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து லீயிடம் கேட்டபோது, ​​2011 இல் பினாங்கு மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே கையெழுத்தான நீர் மறுசீரமைப்பு ஒப்பந்தம் அவற்றில் ஒன்று என்று ஜைரில் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் மெங்குவாங் அணை விரிவாக்கத் திட்டம் (MDEP) இடம்பெறுகிறது. இது நான்கு கட்டங்களை உள்ளடக்கியது என
ஜைரில் விளக்கமளித்தார்.

“அணையின் விரிவாக்கத்தை உள்ளடக்கிய முதல் கட்டம், 2017 ஏப்ரல்,10 இல் நிறைவடைந்தது மற்றும் மேக் சுலாங் பம்ப் ஹவுஸை மேம்படுத்தும் கட்டம் 2A, 2017 செப்டம்பர், 28 இல் நிறைவடைந்தது.

“இதற்கிடையில், மாக் சுலோங் பம்ப் நிலையத்தில் இருந்து சுங்கை டுவா ஆற்றின் மூல நீர் விநியோகத்தை உள்ளடக்கிய 2B பிரிவுத் திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“கடைசியாக, 2சி கட்டத்தின் கீழ் லஹர் யூய் பம்ப் ஹவுஸ் கட்டுமானப் பணி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சின் (3/2/2023) கடிதத்தின் படி, சுங்கை டுவாவிலிருந்து எடுக்கப்படும் நீர் அதிகபட்ச அளவை எட்டியதாகக் காரணம் குறிப்பிடப்படுகிறது.

“இந்த திட்டம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது ஏப்ரல் முதல் மே மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான பருவமழை காலத்தில் சுங்கை டுவாவிலிருந்து நீரை எடுக்க பினாங்கு நீர் விநியோக வாரியத்திற்கு உதவும்.

“இம்முயற்சியின் மூலம் குறிப்பாக மழைக்காலத்தில் கடலில் கலக்கும நீரை மெங்குவாங் அணையில் சேமிக்க முடியும்.

“மெங்குவாங் அணையானது வறண்ட காலத்திலோ அல்லது நீர் நெருக்கடியின் போதும் 600 MLD நீரை சுங்கை டுவா சுத்திகரிப்பு ஆலைக்கு அனுப்ப முடியும்.

“இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்துவோம். மேலும். இது மாநிலம் மற்றும் அதன் மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வோம்,” என்று ஜைரில் கூறினார்.

மெங்குவாங் அணை விரிவாக்கத் திட்டம் (MDEP) ரிம1.2 பில்லியன் செலவிலும், அதில் லஹர் யூய் பம்ப் ஹவுஸ் மட்டுமே ரிம80 மில்லியனில் கட்டப்பட உள்ளது.