கொம்தார் – Trend Mart & Cafe-இல் திறக்கப்பட்டுள்ள புதிய Kopiesatu கிளை, குறிப்பாக வேளாண் உணவுத் துறையில் உள்ளூர் தொழில்முனைவோரின் பொருட்களை விரிவாக சந்தைப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான தளமாக அமையும் எனக் கருதப்படுகிறது.
கொம்தாரில் அதன் புதிய கிளையைத் திறந்து வைத்த முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், தொழில்முனைவோர் ஆட்சிக்குழுவின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முயற்சி, உள்ளூர் தொழில்முனைவோருக்குப் பரந்த மற்றும் பயனுள்ள சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

“Trend Mart & Cafe என்பது, குறிப்பாக வேளாண் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் தொழில்முனைவோருக்குப் பரந்த சந்தைப்படுத்தல் தளத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.
வாடிக்கையாளர்களுக்கு நட்பான மற்றும் அமைதியான சூழலில் இப்பொருட்கள் இக்கஃபேவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கொம்தாரின் 3-ஆம் மாடியில் நடைபெற்ற திறப்பு விழாவில் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், வாணிகம், தொழில்முனைவோர் மற்றும் புறநகர் மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் ரஷிடி ஸினோல், மாநில அரசின் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ ஸுல்கிப்லி லோங், ஊராட்சி, நகர் & புறநகர் திட்டமிடல் ஜேசன் ஹெங் மூய் லாய், FAMA-வின் தலைமை இயக்குநர் அப்துல் ரஷிட் பஹ்ரி மற்றும் மாநில நிதி அதிகாரி டத்தோ ஸைரி மாட் அலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும் கருத்து தெரிவித்த சாவ், மளிகைக் கடை மற்றும் கஃபே ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்தக் கடை கொம்தாரில் முதன்முறையாக அறிமுகப்பட்டதாகவும், இது வாடிக்கையாளர்களின் அனுபவத்திற்கு மேலதிக மதிப்பை வழங்குவதோடு உள்ளூர் தொழில்முனைவோர் சூழலை வலுப்படுத்தும் என்றும் கூறினார்.
“உள்ளூர் பிராண்டுகளின் பொருட்களுடன், காபி விதைகளை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகள் மற்றும் சிறு தொழில்முனைவோரின் பல்வேறு தயாரிப்புகளும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
“இதன் மூலம், தொழில்முனைவோர் தங்களது பிராண்டுகளை அதிகமான வாடிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தி, விற்பனையை அதிகரிக்க முடியும்,” என்றார்.
அதேவேளையில், இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், அவை உள்ளூர் தொழில்முனைவோரின் வணிக வளர்ச்சிக்கும், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (SME) துறையின் மேம்பாட்டின் மூலம் மாநில பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“இந்த புதிய கிளையின் திறப்பு, தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டங்களை வலுப்படுத்துவதிலும், அதிக திறன் கொண்ட உள்ளூர் தயாரிப்புகளுக்கான சந்தை அணுகலை விரிவுபடுத்துவதிலும் மாநில அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது,” என்றார்.
இதற்கு முன்னர், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சும் (KPKM), FAMA-வும் முன்னெடுத்துள்ள உள்ளூர் பழங்களை உண்போம் என்ற பிரச்சாரத்திற்கு ஆதரவாக, மேதகு சாவ் கொன் இயோவ் உள்ளூர் காய்கறிகள் மற்றும் பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதற்கிடையில், ரஷிடி ஸினோல், இந்த புதிய கிளை திறப்பை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த FAMA-வுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
“ஆரம்பக் கட்டத்தில், கொம்தாரில் நடைபெற்ற சந்தைப்படுத்துதல் திட்டத்தில் பங்கேற்ற தொழில்முனைவோருக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. அங்கு விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்கு கிடைத்த வரவேற்பு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது.
“எனவே, சந்தைப்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெறாத நாட்களிலும் பொதுமக்கள் இத்தகைய உள்ளூர் தயாரிப்புகளை எளிதாகப் பெறுவதற்காக Trend Mart & Cafe நிரந்தர விற்பனை மையமாக உருவாக்கப்பட்டது,” என்றார்.
FAMA-வுடன் இணைந்து, Kopiesatu இவ்விடத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், காபி சார்ந்த பல்வேறு தயாரிப்புகள் மற்றும் உள்ளூர் தொழில்முனைவோரின் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், உள்ளூர் விற்பனையாளர்களால் தயாரிக்கப்படும் காலை உணவு வகைகளும் இங்கு வழங்கப்படுவதால், மாநிலத்தின் உணவு மற்றும் பானத் தொழில்முனைவோருக்கு கூடுதல் வணிக வாய்ப்புகள் உருவாகின்றன என்றார்.
“இன்று கிடைத்த வரவேற்பு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. பல உள்ளூர் விற்பனையாளர்களும் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
“இந்த முயற்சி, பினாங்கு முழுவதும் பொருத்தமான இடங்களுக்கு விரிவுபடுத்தக்கூடிய பல இதுபோன்ற திட்டங்களுக்கான தொடக்கமாக அமையும் என்று நம்புகிறேன்,” என்றார்.
உள்ளூர் தொழில்முனைவோரின் வணிகத் திறனை மேம்படுத்தவும், உள்ளூர் பிராண்டுகளை வலுப்படுத்தவும், புதிய சந்தைகளை ஆராயவும் மாநில அரசு தொடர்ந்து உதவி வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.