ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB), மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்) எனும் அரசு பொதுத் தேர்வில்
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் சிறப்பு விழா இன்று நடைபெற்றது.
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், இம்மாநில இளைஞர்களின் எதிர்காலம் குறித்து பெருமையையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். மேலும், கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

இந்த விழாவில் எஸ்.பி.எம் மற்றும் எஸ்.தி.பி.எம் தேர்ச்சியை முடித்த மாணவர்களுக்குக் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் தலமாகவும் செயல்படும் பொருட்டு, சரியான நேரத்தில் மற்றும் பாராட்டத்தக்க முயற்சியாக கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றதாக சாவ் பாராட்டினார்.
கல்வி வெற்றியைக் கொண்டாடுவதிலும், உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய சரியானப் பாதைகளை நோக்கி மாணவர்களை வழிநடத்துவதிலும் PHEB மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

“தரமான கல்விக்கான அணுகலை வலுப்படுத்துதல் மற்றும் அனைவருக்கும் வாய்ப்புகளை விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வையின் கீழ் மனித மூலதன மேம்பாட்டில் மாநில அரசின் கவனம் செலுத்தப்படுவதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

“பினாங்கில் உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் மகத்தான ஆற்றல் இருப்பதாக நான் எப்போதும் நம்பிக்கை கொள்கிறேன்.
“அவர்களுக்குத் தேவையானது சரியான ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் சரியாக தலமாகும். கல்வி ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். எனவே, யாரும் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதிக் கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
2024 ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் பினாங்கில் 819 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ பெற்றனர், இது முந்தைய ஆண்டை விட கூடுதலான மாணவர்கள் பெற்றுள்ளனர், என சாவ் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மாநிலத்தின் சராசரி தரப் புள்ளி (GPN) 2023 இல் 4.49 ஆக இருந்த நிலையில், தற்போது 4.39 ஆக உயர்ந்துள்ளது.
கூடுதலாக, எஸ்.பி.எம் சான்றிதழ்களைப் பெறத் தகுதியுள்ள மாணவர்களின் சதவீதம் 92.64% இலிருந்து 93.67% ஆக உயர்ந்துள்ளது.
மாணவர்கள் தங்கள் எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளை ஒரு இறுதிப் புள்ளியாகக் கருதாமல், வாழ்நாள் முழுவதும் கற்றல் பயணத்தின் தொடக்கமாகக் கருத வேண்டும் என்று சாவ் வலியுறுத்தினார்.
“எஸ்.பி.எம் தேர்வில் வெற்றி என்பது முதல் படி மட்டுமே. தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுங்கள்.
“உங்கள் திறன்கள் வேலைக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு மட்டுமல்ல, புத்தாக்கத் திறனை வளர்க்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நமது நாட்டில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அவசியமாகும்,” என்று அவர் கூறினார்.
உயர் தொழில்நுட்ப சகாப்தத்தில் நிபுணத்துவம் மற்றும் திறன் பெற்றிருப்பதன் முக்கியத்துவத்தையும் சாவ் வலியுறுத்தினார். மலேசியாவின் எதிர்காலம் இளைய தலைமுறையின் தனிநபர் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பைப் பொறுத்தது என்று கூறினார்.
சிறந்த கல்வி அடைவுநிலையை அங்கீகரிக்கும் விதமாக, 2025,மே மாதம் நிலவரப்படி, பினாங்கில் 1,217 மாணவர்களுக்கு PHEB ஏறக்குறைய ரிம1.5 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், 2024 ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் 7A மற்றும் அதற்கு கூடுதலான மதிப்பெண்கள் பெற்ற 37 பள்ளிகளைச் சேர்ந்த 167 சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு மொத்தம் ரிம70,200 மதிக்கதக்க ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.
மாநில முதலமைச்சர் விருது பெற்ற அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
“2025-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு எதிர்நோக்கும் மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மன உறுதியும், தெளிவான நோக்கமும் கொண்டு, கல்வி உங்கள் வாழ்க்கையையும் சமூகத்தையும் மாற்றும் சக்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள்,” என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என். இராயர், துணைத்தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் மற்றும் மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு ஆகியோர் கலந்து கொண்டனர்.