சமூக விளையாட்டு மேம்பாடு மற்றும் சங்கங்களுக்கு ரிம2.36 மில்லியன் நிதி ஒதுக்கீடு

499506762 1119271383570903 5990098017631551192 n

ஜார்ச்டவுன் – 2025 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு மேம்பாட்டு நிதியாக, மாநிலத்தில் உள்ள சமூக மற்றும் விளையாட்டுச் சங்கங்களுக்கு மொத்தம் ரிம2.36 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் விளையாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாநில அரசு மேற்கொள்ளும் முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக இது நடைபெறுகிறது என இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் ஜி சென் தெரிவித்தார்.

“2025 ஆம் ஆண்டிற்கு, சமூக விளையாட்டு நிதியில் மொத்தம் ரிம1.2 மில்லியன் 93 விண்ணப்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, இதில் 22,858 பேர் பங்கேற்றனர்.

“மேலும், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மாநிலம், தேசியம் மற்றும் அனைத்துலக மட்டங்களில் குறிப்பிடத்தக்க தாக்கம் மற்றும் செயல்திறனை கொண்ட விளையாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டு அமைப்புகளுக்கு விளையாட்டு உதவித்தொகை (GPS) வழங்கி வருகிறது.

“இன்றுவரை, மாநிலத்தில் உள்ள 17 சங்கங்கள் ரிம1.16 மில்லியன் மதிப்புள்ள உதவித்தொகையைப் பெற்றுள்ளன, அவற்றில் மூன்று சங்கங்கள் சங்கப் பதிவுத் துறையில் (ROS) பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 14 சங்கங்கள் விளையாட்டு ஆணையர் அலுவலகத்தில் (PJS) பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் விளக்கமளித்தார்.

பாடாங் லாலாங் மாநில சட்டமன்ற உறுப்பினருமான அவர், 15-வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாவது தவனையின் இரண்டாவது கூட்டத்தில் தனது நிறைவு உரையை ஆற்றும்போது இவ்வாறு கூறினார்.

உள்ளூர் விளையாட்டானது, விரிவான சமூக ஈடுபாட்டின் மூலம் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும் தேசிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் மாநில அரசு ஒரு அனைவருக்குமான விளையாட்டுத் திட்டத்தை உருவாக்கி வருவதாக ஜி சென் தெரிவித்தார்.

“2025 ஆம் ஆண்டிற்கு, மொத்தம் 224 பொது மக்களுக்கான விளையாட்டுத் திட்டங்கள் ரிம881,670 நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில் மாநில அளவில் 29 திட்டங்களும் மாவட்ட அளவில் 195 திட்டங்களும் அடங்கும், இதில் 333,768 தனிநபர்கள் பங்கேற்கின்றனர்,” என்று அவர் கூறினார்.

மேம்பாடு மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு, உடற்பயிற்சி, பொழுதுபோக்கு மற்றும் இயக்கம், மாற்றுத்திறனாளிகள் (OKU) மற்றும் முதியோர் என நான்கு பிரிவுகள் மூலம் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று ஜி சென் மேலும் விளக்கமளித்தார்.

இதற்கிடையில், மாநிலத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை வலுப்படுத்தும் முயற்சிக்கு இணங்க, விளையாட்டு வீரர்களின் தங்குமிடங்களை நிர்மாணித்தல், ஏற்கனவே உள்ள வசதிகள் மற்றும் அரங்கங்களை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு திட்டங்கள் உட்பட பல விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

“உதாரணமாக, பொருளாதார அமைச்சகத்தால் மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்ட கெபாலா பத்தாஸ் இளைஞர் மையத் திட்டம் மற்றும் தற்போது குத்தகை மதிப்பீட்டில் உள்ள ‘Sport City’ மற்றும் பத்து காவான் அரங்கம் திட்டங்கள் ஆகியவை உள்ளடங்கும்.

“இத்திட்டங்கள் அனைத்தும் பினாங்கு மக்களின் நல்வாழ்வுக்காகவே” என்று அவர் கூறினார்.