டயாலிசிஸ் நோயாளிகளுக்கு கோபிந்த் சிங் ரிம50,000 நிதியுதவி

img 20260928 wa0216(1)

ஜார்ச்டவுன் – குறைந்த வருமானம் கொண்ட 50 டயாலிசிஸ் நோயாளிகளுக்கு தலா ரிம1,000 வீதம் ஒருமுறை நிதியுதவி வழங்குவதற்காக, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ரிம50,000 நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதன் மூலம், 2026ஆம் ஆண்டில் PHEB மேற்கொண்ட இரு கட்ட டயாலிசிஸ் உதவித் திட்டங்களின் வழியாக மொத்தம் 100 நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

img 20260928 wa0221

இந்நிதியுதவி மூலம் டயாலிசிஸ் சிகிச்சைக்கான செலவுச் சுமையைக் குறைக்க முடியும் என பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) தலைவரும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என் இராயர் தெரிவித்தார்.

img 20260928 wa0214

PHEB துணைத் தலைவரும் செனட்டருமான டாக்டர் ஆர்.ஏ லிங்கேஸ்வரன், டயாலிசிஸ் நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இத்தகைய நிதியுதவிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை, என்றார்.

img 20260928 wa0211

2026ஆம் ஆண்டுக்கான இரண்டாம் கட்ட டயாலிசிஸ் உதவியாக இந்நிதியுதவி வழங்கப்படுகிறது. செப்டம்பர் 27ஆம் தேதி பினாங்கு, காம்ப்ளெக்ஸ் மஸ்யாரகாட் பென்யாயாங் வளாகத்தில் நடைபெற்ற உதவி வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சார்பில் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் கலந்து கொண்டு நிதியுதவியை எடுத்து வழங்கினார்.

img 20260928 wa0218

நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் தனது உரையில், டயாலிசிஸ் சிகிச்சையை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை வரை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அதன் செலவு நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு கணிசமான நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடும், என்றார்.

img 20260928 wa0212

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக, மக்களின் சிரமங்களை நேரடியாகப் புரிந்துகொண்டு, அவர்களின் சுமையைக் குறைப்பது எங்களது பொறுப்பாகும்,” என்றார்.

மேலும், சமூகத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து சேவையாற்றி வரும் PHEB ஆணையர்களின் பணிகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

இதனிடையே, PHEB சார்பில் கோபிந்த் சிங் டியோவுக்கு நன்றி தெரிவித்த இராயர், சமூகத்தின் தேவைகளுக்கேற்ப தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதற்கும் பாராட்டு தெரிவித்தார்.

சமூகத்தின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து பொதுமக்கள் PHEB-யை நேரடியாகத் தொடர்புகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும், அவற்றைப் பரிசீலித்து தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

2026ஆம் ஆண்டின் முதல் கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் PHEB தனது சொந்த நிதியின் மூலம் 50 டயாலிசிஸ் நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சூன் சியாங்; பினாங்கு மாநகர் கழக உறுப்பினர்கள் விஸ்வநாதன், தயாளன் மற்றும் செபராங் பிறை மாநகர் கழக உறுப்பினர் பொன்னுதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.