தேசியக் கொடி நமது ஒற்றுமை மற்றும் சுதந்திரத்தின் அடையாளம் – முதலமைச்சர்

Admin
whatsapp image 2026 07 31 at 3.19.20 pm

பாடாங் லாலாங் – ஒற்றுமை மற்றும் தேசப்பற்றின் அடையாளமாக, 2026ஆம் ஆண்டின் தேசிய மாதம் மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, பினாங்கு மக்கள் தங்களது வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் வாகனங்களில் தேசியக் கொடியான ‘ஜாலூர் கெமிலாங்’-ஐ பறக்கவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

img 20260731 wa0133

தேசியக் கொடியைப் பறக்கவிடுவது வெறும் அடையாளச் செயலாக மட்டுமல்ல; மாறாக, அமைதியான மற்றும் இறையாண்மை கொண்ட தேசத்தை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள், தியாகங்கள் மற்றும் ஒற்றுமையின் வரலாற்றைப் பிரதிபலிப்பதாகும் என பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்கி, நாட்டின் சுதந்திரத்தைப் போற்றி மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
whatsapp image 2026 07 31 at 3.19.19 pm

“அமைதியான மற்றும் இறையாண்மை கொண்ட மலேசியாவை உருவாக்கிய போராட்டங்கள், தியாகங்கள் மற்றும் ஒற்றுமையின் வரலாறு, ‘ஜாலூர் கெமிலாங்’ கொடியில் பொதிந்துள்ளது.

“அடுத்த தலைமுறையினருக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்க மேற்கொள்ளப்படும் அயராத முயற்சிகளின் மூலம், சுதந்திரத்தைப் பாதுகாத்து, போற்றி, மேலும் வளப்படுத்த வேண்டும் என்பதை இந்த அசைந்தாடும் தேசியக் கொடி நமக்கு நினைவூட்டுகிறது,” என்று இன்று நடைபெற்ற மாநில அளவிலான ‘ஜாலூர் கெமிலாங்’ (தேசியக் கொடி) பறக்க விடுவோம் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
whatsapp image 2026 07 31 at 3.19.17 pm
இந்நிகழ்ச்சியில், மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் டத்தோ ஸ்ரீ லாவ் சூ கியாங்; மாநிலச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சுல்கிஃப்லி லாங்; மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள்; மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் ; பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி) மேயர் டத்தோ ஏ. இராஜேந்திரன்; செபராங் பிறை மாநகர் கழகத்தின் மேயர் டத்தோ படெருல் அமின் அப்துல் ஹமீத்; மாநிலச் செயலாளர் (மேம்பாடு) டத்தோ முகமது அப்துல் ரஹ்மான் மற்றும் பல முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், நாட்டின் அமைதி, வளம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் அடையாளமாகத் திகழும் இந்த ஆண்டின் தேசிய மாதம் மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டங்களின் கருப்பொருளான ‘மலேசியா மடானி: நல்வாழ்வை அனுபவிப்போம்’ என்பதை அனைத்து குடிமக்களும் நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

“இன, மத மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையின் வலிமையாலும் இப்பிராந்தியத்தின் பொருளாதாரம், முதலீடு மற்றும் புத்தாக்கத்திற்கான மிகத் துடிப்பான மையங்களில் ஒன்றாகத் திகழும் பினாங்கு மாநிலம், நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தப் பன்முகத்தன்மையே நமது மாநிலத்தின் அடையாளத்தை வரையறுக்கிறது.

“பெருகிவரும் சவால்கள் நிறைந்த உலகில், ஒரு மாநிலத்தின் வலிமை என்பது வெறும் பொருளாதாரப் புள்ளிவிவரங்களால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. மாறாக, மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதிலும், ஒருவரையொருவர் மதிப்பதிலும், பொதுவான நோக்கங்களுக்காக ஒன்றிணைந்து நிற்பதிலுமே அது அளவிடப்படுகிறது. இத்தகைய ஒற்றுமையே பினாங்கு தொடர்ந்து அமைதியையும் வளர்ச்சியையும் அனுபவிப்பதற்கான அடித்தளமாக அமைகிறது,” என்று அவர் கூறினார்.

பினாங்கின் பொருளாதாரச் சாதனைகளைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், நாட்டின் மின்சாரம் மற்றும் மின்னணுவியல் (E&E), அத்துடன் குறைக்கடத்தித் (Semiconductor) தொழில்துறைகளுக்கான முக்கிய மையமாக பினாங்கு திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

“அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பினாங்கு ஆறு சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. அதேவேளையில், நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பில் கிட்டத்தட்ட 38 சதவீதத்திற்கு பினாங்கு பங்களிக்கிறது.

“மலேசியப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய உந்துசக்திகளில் ஒன்றாக பினாங்கு விளங்குகிறது என்பதை இந்தச் சாதனைகள் நிரூபிக்கின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

“இந்தக் கொண்டாட்டம், மாட்சிமை தங்கிய மாமன்னர் மற்றும் நாட்டின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்த அனைவருக்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

“அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. ஆனால், அவை ஒருபோதும் நமது ஒற்றுமையைப் பாதிக்கவோ அல்லது நாட்டின் மீதான குடிமக்களின் விசுவாசம் குறித்து சந்தேகங்களை எழுப்பவோ கூடாது,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தக் கொண்டாட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், அவர் அதிகாரப்பூர்வ அரசு வாகனங்களில் தேசியக் கொடியைப் பொருத்தினார். தொடர்ந்து, மாநில அரசுத் துறைகளைச் சேர்ந்த 32 வாகனங்கள், மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த 41 வாகனங்கள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த இரண்டு வாகனங்கள் என மொத்தம் 75 வாகனங்கள் பங்கேற்ற கொண்டாட்ட ஊர்வலத்தை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.