ஜார்ச்டவுன் – பினாங்கு குயின் ஸ்ரிட் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலத்தின் நவராத்திரி விழாவை முன்னிட்டு புதிய தேர் அதிகாரப்பூர்வமாக பவனி வந்தது.
துர்கா தேவியின் உருவம் கொண்ட 7.2 மீட்டர் உயரத் தேர், குயின் ஸ்ரிட்டில் உள்ள ஆலயத்தில் இருந்து ஊர்வலப் பயணத்தைத் தொடங்கி, லிட்டில் இந்தியாவைச் சுற்றி வந்து மீண்டும் ஆலயத்தைச் சென்றடைந்தது.

இந்த ஒன்பது நாள் திருவிழாவிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்தத் தேர், 2004 ஆம் ஆண்டு அறிமுகமான ஆலயத்தின் 20 ஆண்டுகள் பழமையான மரத் தேருக்கு பதிலாக இப்புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
விஜயதசமி அன்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தால் (PHEB) அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிதாக கட்டப்பட்ட தேர், பாரம்பரிய காரைக்குடி பாணியில் எண்கோண அடித்தளத்துடன் கட்டப்பட்டது. 23 அடி உயரமும் 9 அடி அகலமும், 6 டன்களுக்கும் அதிகமான எடையும் கொண்ட இந்த தேர், முக்கியமாக தேக்கு மரம் மற்றும் நீடித்த கடின மரங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று அறப்பணிய் வாரியத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

ரிம200,000 மதிப்பிலான இந்தத் தேர், ஒரு பக்தரின் முழுமையான நன்கொடையின் மூலம் நிதியளிக்கப்பட்டது. இது பினாங்கின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான சமூகத்தின் நிலைத்த பக்தி மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்றாக திகழ்கிறது என்று செனட்டர் குறிப்பிட்டார்.

மேலும், ஆலயத் தலைவர் ஆர். அரசு பிள்ளை கூறுகையில், தேர் தயாரிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி இந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவடைந்தது, என்றார்.
பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டதால், பழைய தேர் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
“அதை மீண்டும் பழுதுபார்ப்பதற்கான செலவு அதிகம் வரும் என்பதால், புதிய தேர் ஒன்றை பயன்படுத்துவதுதான் சிறந்தது என முடிவு செய்தோம்,” என்று அவர் தெரிவித்தார்.
இப்புதிய தேர் இந்தியாவின் காரைக்குடியில் உள்ள கோயில் தேர் கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்டு, பின்னர் பினாங்கிற்கு கொண்டு வரப்பட்டது.
“தேர் கிட்டத்தட்ட 90% தேக்கு மரத்தால் ஆனது, அலங்காரப் பொருட்கள் மற்றும் பொருத்துதல்கள் மற்ற வகை மரங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
“7.2 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்ட, இந்தத் தேர் எங்கள் வெள்ளி மற்றும் தங்க ரதங்களை விட உயரமானது.
“கண்ணைக் கவரும் அளவுக்கு உயரமானது, ஆனால் பயணத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
“பாதுகாப்பு மற்றும் சீரான இயக்கத்தை உறுதி செய்வதற்காக, ஊர்வலத்தின் போது தேர் ஒரு ‘buggy’ வாகனம் மூலம் இழுக்கப்படும்,” என்று அரசு கூறினார்.
இந்தத் தேர் தெய்வங்களையும் ஆலய மரபுகளையும் கௌரவிக்கும் வகையில், சிறப்பு சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
“மேலும், பிற பெரிய மரத் தேர்களையும் பார்த்தோம், ஆனால் நம் ஆலயத்தின் பாரம்பரியம் மற்றும் அடையாளத்தையும் வேரூன்றி இருக்கும் வகையில் இத்தேர் தேர்ந்தெடுக்கப்பட்டது,” என்று அரசு விளக்கமளித்தார்.
இந்தத் தேர் ஊர்வலம், லிட்டில் இந்தியாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களை பக்திமயத்தில் ஆல்துவதோடு அனைவரையும் கவரும் என நம்பப்படுகிறது.
இக்கொண்டாட்டத்தில் துணை நிதியமைச்சரும் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் ஹுய் யிங், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர், துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், செயலாளர் மற்றும் ஆணையர்கள் கலந்து சிறப்பித்தனர்.