குளுகோர் – பத்து உபான் மாநில சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், புக்கிட் ஜம்புல், பினாங்கு கோல்ஃப் கிளப் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘கோல்ஃப் இளைஞர் அனுபவம்’ நிகழ்ச்சி, இளைஞர்களின் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் மேம்படுத்துகிறது, என தெரிவித்தார்.
இளைய தலைமுறையினரிடையே கோல்ஃப் விளையாட்டை அறிமுகப்படுத்துவதையும் அவர்கள் இம்மாதிரியான விளையாட்டுகளின் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மொத்தம் 35 இளைஞர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு பத்து உபான் மாநில சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆதரவு நல்கினார். அதோடு, இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரின் மூத்த சிறப்புச் செயலாளர் சியா பெங் குவான் அவரின் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.
பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், இளைஞர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதில் விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த பத்து உபான் இளைஞர் அணியினருக்கும், பந்தாய் ஜெரெஜாக்கின் இளைஞர் அணியினருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், பங்கேற்பாளர்களில் பெரும்பாலோர் முதல் முறையாக கோல்ஃப் விளையாட முன்முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அவர்களுக்கு கோல்ஃப் மைதானத்தில் விளையாட்டு நுட்பங்கள் மற்றும் பயிற்சி அமர்வுகள் போன்ற அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமானது இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை வளர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது மற்றும் கோல்ஃப் விளையாட்டில் ஆர்வத்தை வளர்ப்பதாகும்.
“இந்த நிகழ்ச்சி கோல்ஃப்
விளையாட்டை அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல, ஆளுமை மேம்பாட்டிற்கான வாய்ப்பை வழங்கி, இளைஞர்களுக்கு புதிய மற்றும் வித்தியாசமான ஒன்றை முயற்சிக்க வாய்ப்பளிக்கிறது” என்று குமரேசன் நம்பிக்கை தெரிவித்தார்.
விளையாட்டு என்பது உடல் செயல்பாடு மற்றும் திறமையை உள்ளடக்கிய ஒரு செயல்பாட்டைக் குறிக்கின்றது. இது மனித வாழ்வின் முக்கிய அங்கமாகும். மேலும் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும், விளையாட்டு ஒரு தனிநபரின் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையை உருவாக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் இது ஒரு சிறந்த கருவியாக விளங்குகின்றது.
பங்கேற்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரிடமிருந்து வரும் நேர்மறையான கருத்து, வகுப்பறைக்கு வெளியே விளையாட்டு மற்றும் கற்றல் அணுகுமுறை மூலம் சமூகங்களை ஒன்றிணைப்பதிலும் இளைஞர்களை மேம்படுத்துவதிலும் இந்நிகழ்ச்சியின் வெற்றியை தெளிவாக நிரூபிக்கிறது.
அடுத்து, விளையாட்டுகளில் ஈடுபடுவதால் மாணவர்களிடையே நற்பண்புகளை வளர்க்க முடியும். மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடும் போது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, ஒற்றுமை, விடாமுயற்சி, தலைமைத்துவம் போன்ற நற்பண்புகளைக் கற்றுக் கொள்கின்றனர். நல்ல குடிமகனாக வளர விளையாட்டு பெரிதும் பங்காற்றுகின்றது என்றால் அது மிகையாகாது.