பத்து உபான் – பினாங்கு மாநில இந்தியச் சமூகத்திற்கு, குறிப்பாக பத்து உபான் மக்களுக்கு, இந்தத் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்குப் பிறகு, பத்து உபானில் உள்ள ஸ்ரீ வீர காளியம்மன் ஆலயத்திற்கு (ஜே.பி.ஜே பத்து உபான் அருகில்) அந்த நிலத்தைப் பயன்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி இறுதியாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்தியாக இது அமைந்துள்ளதாக பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் அனுமதிக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

“இந்நிலம் தற்போது மாநில அரசால் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு (PHEB) அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. இது ஆலயத்திற்கும் அதன் பக்தர்களுக்கும் முக்கியமான மைல்கல்லாக அமைகிறது,” என அவர் கூறினார்.
2003ஆம் ஆண்டு, கம்போங் செலாமாட் பகுதியில் இருந்து (பெஸ்தா தளத்திற்குப் பின்னால்) தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நிலத்தைப் பெறுவதற்காக ஆலய நிர்வாகம் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலமாக தொடர்ந்து முயற்சி செய்து வந்ததாக அறியப்படுகிறது.

“பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விடாமுயற்சி, பொறுமை மற்றும் அர்ப்பணிப்பின் பலனாக இந்த சாதனை தற்போது நனவாகியுள்ளது,” என குமரேசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர்.
2018ஆம் ஆண்டு, சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றபோது, ஆலயத் தலைவர் டத்தோ ஞானசேகரன் நிலப் பட்டா பெறுவதற்கான உதவியை கோரி தனது சேவை மையத்தை அணுகியதாக அவர் தெரிவித்தார். அவர் இதற்கு முன்பும் பலரிடம் உதவி நாடியிருந்தும், இந்தப் பிரச்சனைக்கு இதுவரை முறையான தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அந்த விவகாரத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக உறுதியளித்ததாகவும், பின்னர் தேவையான அனைத்து ஆவணங்களையும் திரட்டி மாநில அரசிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் குமரேசன் தெரிவித்தார்.
மேலும், மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர்களின்போதும் இந்த விவகாரம் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்ததாக அவர் கூறினார்.
துரதிர்ஷ்டவசமாக, கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக இந்த செயல்முறை தாமதமடைந்ததுடன், மாநில சட்டமன்றமும் கலைக்கப்பட்டது.
இருப்பினும், 2023ஆம் ஆண்டு தாம் இரண்டாவது முறையாக மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் மீண்டும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதாக குமரேசன் தெரிவித்தார்.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான ஆர்.எஸ்.என். இராயர், துணைத் தலைவர் டாக்டர் லிங்கேஸ்வரன், வாரியச் செயலாளர் மற்றும் ஆணையர்களின் ஆதரவுடன் 25,000 சதுர அடி நிலத்தை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் மாற்றுவதற்கான ஒப்புதல் வெற்றிகரமாகப் பெறப்பட்டது.
இந்த செயல்முறையை எளிதாக்குவதில் வலுவான ஆதரவையும் அர்ப்பணிப்பையும் வழங்கிய பினாங்கு மாநில அரசு, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்தார்.
இது பத்து உபானில் உள்ள ஆலயத்திற்கும் இந்து சமூகத்திற்கும் உண்மையிலேயே ஒரு அர்த்தமுள்ள மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும் எனவும் அவர் கூறினார்.