ஆயிர் ஈத்தாம் – புக்கிட் குளுகோரில் வசிப்பவர்களுக்கான சமூகக் கூடமாக முன்னாள் சன்ஷைன் ஃபார்லிம் தளத்தை மீண்டும் அபிவிருத்தி செய்வதற்கான ஒரு திட்டத்திற்கு பினாங்கு அரசாங்கம் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் இருவரிடமிருந்தும் ஊக்கமளிக்கும் ஆதரவு கிடைத்துள்ளது.
மாநில அரசு இந்த திட்டத்தை வரவேற்பதாக முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார், ஆனால் இந்த நிலம் MBPP-க்கு சொந்தமானது என்பதால், இதனை முதலில் பினாங்கு மாநகர கழகமும் (MBPP) சன்ஷைனுக்கும் இடையே விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“பழைய சன்ஷைன் ஃபார்லிம் அமைந்துள்ள இந்நிலம் MBPP இன் உரிமையின் கீழ் உள்ளது.
“இருப்பினும், அந்தக் கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு சன்ஷைனால் கட்டப்பட்டது, அப்போது MPPP என்று அழைக்கப்பட்ட கவுன்சில், இந்நிலத்தை அவர்களுக்கு குத்தகைக்கு கொடுத்தது,” என்று இன்று ஃபார்லிமில் உள்ள சன்ஷைன் சென்ட்ரலில் நடந்த தீபாவளி நிகழ்ச்சியில் தனது உரையில் சாவ் கூறினார்.
“பல ஆண்டுகளாக, இந்த பல்பொருள் அங்காடி ஆயிர் ஈத்தாம், பாயா தெருபோங் மற்றும் புக்கிட் குலுகோர் மக்களுக்கு ஒரு முக்கிய சில்லறை வர்த்தக அடையாளமாக செயல்பட்டது.
“இப்போது சன்ஷைன் அதன் புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டதால், பழைய இடம் இனி பயன்படுத்தப்படவில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ”என்று அவர் கூறினார்.
இத்தளத்தை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பது குறித்து MBPP மற்றும் சன்ஷைன் இரண்டும் பரஸ்பர புரிதலை எட்ட வேண்டும் என்று சாவ் விளக்கினார்.
“இந்தப் பிரச்சனை குத்தகை மற்றும் உரிமை ஒப்பந்தங்களை உள்ளடக்கியது, எனவே இது முறையாகக் கையாளப்பட வேண்டும்.
“ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டவுடன், அந்த இடத்தை சமூக பயன்பாட்டிற்காக, குறிப்பாக புக்கிட் குளுகோர் மக்களுக்கான மண்டபமாக மீண்டும் பயன்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
குறிப்பாக புக்கிட் குளுகோர் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட தொகுதிகளில், உள்ளூர் அரங்குகள் மற்றும் பொது இடங்கள் தேவை என்று குடியிருப்பாளர்கள் நீண்ட காலமாக வெளிப்படுத்தியுள்ள சமூக வசதிகளை விரிவுபடுத்தும் மாநில அரசின் நீண்டகால இலக்கோடு இந்த திட்டம் ஒத்துப்போகிறது என்றும் சாவ் மேலும் கூறினார்.
இதற்கிடையில், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் இந்த தளத்தின் இருப்பிடம் புக்கிட் குளுகோர், ஆயுர் ஈத்தாம், பாயா தெருபோங் மற்றும் ஸ்ரீ டெலிமாவின் கீழ் உள்ள மூன்று மாநில தொகுதிகளுக்கும் சேவை செய்யும் ஒரு புதிய சமூக மண்டபத்திற்கு சிறந்த தேர்வாக அமைகிறது என்று கூறினார்.

அதே நிகழ்வின் போது, தொகுதியின் பண்டிகை கால மக்கள் தொடர்பு திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் குடும்பங்களுக்கு 500 தீபாவளி பரிசுப் கூடைகள் மற்றும் பற்றுச்சீட்டுகளை ராம்கர்பாலும் சாவ்வுடன் எடுத்து வழங்கினார்.
ஒவ்வொரு பெறுநருக்கும் 5 கிலோ அரிசி, பிஸ்கட் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுப் பையுடன், ரிம60-க்கான பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.

MBPP, மாநில அரசு மற்றும் கூட்டாட்சி பிரதேச திட்டமிடல் திட்டம் (FTPP) போன்ற கூட்டாட்சி நிறுவனங்களுக்கு இடையேயான வலுவான ஒத்துழைப்புடன், முன்மொழியப்பட்ட சமூகக் கூடத் திட்டம் விரைவில் அமைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
முதலமைச்சரின் ஆதரவு மற்றும் அனைத்து பங்குதாரர்களிடையேயான ஒருங்கிணைப்புடன், இந்த திட்டத்தை நாம் நிறைவேற்ற முடியும் என ராம்கர்பால் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய், ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் எங் சூன் சியாங் மற்றும் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் கோனி டான் மற்றும் MBPP மேயர் டத்தோ Ir. ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.