பினாங்கில் தமிழ்ப்பள்ளிகளின் நிலப் பிரச்சனைக்குத் தீர்வுக்கான இலக்கு

makerlab 3 1201x800

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு குழுவின் முன்முயற்சியின் கீழ், நிலப்பிரச்சனை எதிர்கொண்ட எட்டு தமிழ்ப்பள்ளிகளும் தற்போது முழுமையான தீர்வை பெற்றுள்ளன அல்லது இறுதி முடிவுகள் கட்டத்தில் உள்ளன.

whatsapp image 2025 11 19 at 10.12.34 am

மலக்கோப் தமிழ்ப்பள்ளி, சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி, ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி, அல்மா தோட்டத் தமிழ்ப்பள்ளி, மேபீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பழனியாண்டி தமிழ்ப்பள்ளி, திரான்ஸ்கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலப் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்காக அயராது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

“மாநில அரசின் முன்முயற்சி திட்டங்கள் மூலம், தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மையும் எதிர்கால வளர்ச்சியும் உறுதிசெய்வதற்கு உரிமை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டமிடல் அடிப்படையில் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது,” என்று 15-வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாவது தவனையின் இரண்டாவது கூட்டத்தில் தனது தொகுப்புரையை ஆற்றும்போது சுற்றுச்சூழல் மற்றும் வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு இவ்வாறு கூறினார்.

ec704444 c188 44d2 b1ad 3f74c8183aef

மேலும், பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளிக்குப் பிரதான மைதானமாகவும், வாகன நிறுத்துமிடமாகவும் பயன்படுத்த, இக்குழுவின் முயற்சியில் ஒரு தனியார் தரப்பினரிடமிருந்து 1.5 ஏக்கர் நிலத்தை வெற்றிகரமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது, என மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு குழுவின் தலைவருமான டத்தோ ஶ்ரீ சுந்தராஜு கூறினார்.

மாநில அரசு, தமிழ் சமூகத்தின் கல்வி தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு எதிர்காலத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்ப்பள்ளிகளுக்கான உள்கட்டமைப்புப் பணிகள் சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் பங்காற்றும் முயற்சிகளைப் பாராட்டிய டத்தோ ஶ்ரீ சுந்தராஜு, அவரது உறுதியான பங்களிப்பு இதற்குக் காரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

“கூடுதலாக, தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் அவர்களுடன் இணைந்து மற்றொரு தேசிய தமிழ் ஆரம்பப் பள்ளியை அமைக்க பணியாற்றி வருகிறேன். இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 28 இருந்து 29 ஆக உயர்வு காணும்,” என கூறினார்.

தற்போதைய 28 தமிழ்ப்பள்ளிகளில் ‘சிறப்பு கல்வி வகுப்பு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம், சிறப்பு கற்றல் ஆதரவு தேவைப்படும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் செயல்பாடுக் காணும், என்றார்.

தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு குழுவின் வழிகாட்டலில் ஆசிரியர்களின் தலைமைத்துவ திறன் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் மாநில கல்வித் துறை மற்றும் தலைமை ஆசிரியர் மன்றத்துடன் இணைந்து பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மற்றும் பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளில் அவசரத் தேவைகள் ஏற்படும் சமயங்களில் உடனடியாக நிதி உதவியை வழங்கும் நோக்கில், இந்தக் குழு ‘தமிழ்ப்பள்ளி அவசரகால நிதி’ என்ற சிறப்பு நிதியத்தை உருவாக்கியுள்ளது. இந்நிதி ஆபத்து அவசர சூழ்நிலைகளில் உடனடியாக விரைந்து உதவ முடிவதை உறுதி செய்கிறது. இதன் மூலம், பள்ளியின் கற்றல் கற்பித்தல் தடைப்படாமல் தொடரும், என்பது உறுதி செய்யப்படுகிறது.

இந்தக் குழுவின் வழிகாட்டலில், 2025 ஆம் ஆண்டிற்கான உள்கட்டமைப்பு மேம்பாடுகள், கல்வி, பயிற்சி, பள்ளி உபகரணங்கள் வாங்குதல் மற்றும் பல்வேறு கற்றல் தேவைகளை உள்ளடக்கிய 28 தமிழ்ப்பள்ளிகள் மற்றும் 14 மழலையர் பள்ளிகளுக்கு மொத்தம் ரிம2.3 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டது என தெரிவித்தார்.