ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB), 2025 ஆம் ஆண்டிற்கான ஆறாவது பொது/தனியார் உயர்கல்வி நிதியுதவி வழங்கும் விழாவை ஏற்பாடு செய்வதன் மூலம் இந்து சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதில் அதன் பங்களிப்பை தொடர்ந்து வலுப்படுத்துகிறது.

பொது மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் தங்கள் படிப்பைத் தொடரும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த (பி40) இந்து மாணவர்களுக்கு உதவுவதே இந்த விழாவின் பிரதான நோக்கமாகும்.
இந்த முறை மொத்தம் 40 மாணவர்கள் கல்வி நிதியுதவியைப் பெற்றனர்.
இன்றைய நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வெற்றிகரமான விண்ணப்பதாரர்களுக்கு மொத்தம் ரிம37,400 நிதி வழங்கப்பட்டது. இது அவர்களின் கல்வித் தேவைகளை ஆதரிக்கிறது.

இந்நிகழ்ச்சியில், 25 இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு தலா ரிம1,000; 13 டிப்ளோமா மாணவர்களுக்கு தலா ரிம800; சான்றிதழ் பயிலும் 2 மாணவர்களுக்கு தலா ரிம500; சபா மற்றும் சரவாக்கில் படிக்கும் மாணவர்களுக்கும் கூடுதலாக ரிம500 நிதியுதவியும் வழங்கப்பட்டது.
இந்த முன்முயற்சி திட்டம், இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவரும், கல்வி மற்றும் சமூக நலன் துறையின் தலைவருமான செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது. அவர் பினாங்கில் உள்ள இந்து சமூகத்தின் கல்வி வளர்ச்சி மற்றும் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி, சமுதாய முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.
மேலும், அதிகமான மாணவர்கள் இத்திட்டத்தில் நன்மைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில், இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது என்று செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.
“வறுமையிலிருந்து விடுப்படுவதற்கான முக்கிய திறவுகோல் கல்வி ஆகும். நிதி நெருக்கடி காரணமாக எந்த மாணவரும் பள்ளியை விட்டு வெளியேறாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். வழங்கப்படும் ஒவ்வொரு உதவியும் சமூக பங்களிப்புகள் மற்றும் இளம் இந்து தலைமுறையின் எதிர்காலத்தை வலுப்படுத்த மாநில அரசின் உறுதியானப் பங்களிப்பாகும்,” என்று அவர் விளக்கமளித்தார்.
இந்த நிகழ்ச்சியை மேலும் உற்சாகப்படுத்த நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த முன்முயற்சிக்காக PHEB-க்கு பாராட்டுத் தெரிவித்தார்.
“ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒரு முறை கல்வி உதவித் திட்டங்களை ஏற்பாடு செய்வதில் PHEB இன் முன்முயற்சி பாராட்டக்குரியது,” என்று லிம் ஹுய் யிங் தனது உரையில் கூறினார்.
பினாங்கு முழுவதும் உள்ள இந்து மாணவர்களுக்கு உதவ 2023 ஆண்டு முதல் ரிம1 மில்லியனுக்கும் அதிகமான நிதியுதவி PHEB வாரியத்தால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. இது மலேசியாவில் உள்ள பிற மத அமைப்புகளுக்கும் ஓர் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு சாதனையாகும், என்று புகழாரம் சூட்டினார்.
“கல்விக்கான முதலீடு என்பது நாட்டின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான முதலீடாகும். பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மேற்கொள்ளும் முயற்சிகள், மலேசிய மடானியின் அறிவும், ஒழுக்கமும், பொறுப்புணர்வும் கொண்ட மனிதவளத்தை உருவாக்கும் இலக்குகளுடன் மிகவும் ஒத்துப்போகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.என் இராயர் தலைமைத்துவத்தின் கீழ் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மத விவகாரங்களை நிர்வகிப்பதில் மட்டுமல்லாமல், சமூக நலன் மற்றும் சமூக மேம்பாட்டிலும் தீவிரப் பங்காற்ற உறுதிபூண்டுள்ளது.