புக்கிட் ஜம்புல் – பினாங்கு மாநில முதலமைச்சர் உடனான ஊடக பாராட்டு விருந்தோம்பல் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட ஊடகப் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். கெர்னி பாரகோன் பேரங்காடி, ‘Anovia Banquet Art Centre’ மையத்தில் நடைபெற்ற சிரிப்பு, கொண்டாட்டம் மற்றும் மனமார்ந்த பாராட்டுகளின் மாலைப் பொழுதாக இன்று அமைந்தது.

‘Glitz and Glam’ எனும் கருப்பொருளைத் தழுவி, விருந்தினர்கள் பிரமிக்க வைக்கும், சிவப்பு கம்பளத்திற்கு ஏற்ற உடையில், மின்னும், நேர்த்தியான மற்றும் நுட்பமான தோற்றத்துடன் வருகையளித்தனர்.
ஹாலிவுட் கவர்ச்சி, விருது வழங்கும் விழாவின் அழகு மற்றும் ஆடம்பரமான இரவு விருந்து பாணிகளால் ஈர்க்கப்பட்ட ஆடைகளை அணிந்து பலர் வந்திருந்தனர், இது இரவின் துடிப்பான சூழலுக்கு மேலும் மகிழ்ச்சியைத் தந்தது.

ஊடக நண்பர்களுக்கு ஆடம்பரமான உணவு வழங்கப்பட்டதுடன், நேரடி இசைக்குழு நிகழ்ச்சிகள், ‘கரோக்கே’ அமர்வுகள் மற்றும் மேடை விளையாட்டுகள் அடங்கிய கலகலப்பான நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
தங்கும்விடுதி பற்றுச்சீட்டுகள் மற்றும் மின்சாதனங்கள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பரிசுகளுடன் பல அதிர்ஷ்டசாலி ஊடக நண்பர்களுக்கு உற்சாகம் அதிகரித்தது.

முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தனது உரையில், இந்த நிகழ்ச்சி பினாங்கில் உள்ள ஊடக சகோதரத்துவத்தின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை அங்கீகரிக்கும் ஓர் அர்த்தமுள்ள தினமாகத் திகழ்வதாக கூறினார்.
“எனவே, இன்றிரவு பாராட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து ஊடகப் பணியாளர்களுக்கும் நான் நன்றித் தெரிவிக்க விரும்புகிறேன்.

“நமது முயற்சிகளை உலகத்துடன் இணைக்கும் ஒரு முக்கிய பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
“தகவல் அளிக்கவும், கல்வி கற்பிக்கவும், ஊக்குவிக்கவும் உங்கள் சக்தி ஈடு இணையற்றது. மேலும் உங்கள் மகத்தான தாக்கத்தை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.
“உங்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி,” என்று அவர் கூறினார்.

“இந்த ஆண்டு நாம் பலவிதமான சவால்களையும் அனுபவங்களையும் கடந்து வந்திருக்கிறோம், பினாங்கு மற்றும் மலேசியாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பற்றி மக்களை தொடர்ந்து விழிப்புடன் வைத்திருக்க, உங்களுள் பலர் செய்திகளை வழங்கும் பணியை முழுமையாக செய்துள்ளீர்கள் என பாராட்டினார்.
இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ, பினாங்கு சமூக மேம்பாடு, சமூக நலன் மற்றும் இஸ்லாம் அல்லாத மத விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம், பினாங்கு உள்ளாட்சி, நகர்ப்புற மற்றும் புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் ஹங் மூய் லைய், முதலமைச்சரின் மூத்த செயலாளர் முகமட் பல்கிஸ் ஒத்மான் மற்றும் மாநில தகவல் தொடர்புப் பிரிவு இயக்குநரும் முதலமைச்சரின் செய்தித் தொடர்பாளர் யாப் லீ யிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.